தமிழகத்தில் தீபாவளி பட்டாசு விற்பனை ரூ.1000 கோடி
தமிழகத்தில் நேற்று முன் தினம் தீபாவளி திருநாள் அனைத்து தரப்பு மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் இந்த வருடம் தீபாவளிக்கு ரூ.1,000 கோடிக்கு பட்டாசு விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பட்டாசு விற்பனை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தீபாவளி கடைசி தேதியில் வந்ததாலும், முதல்வர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருவதாலும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் ஆடம்பரமாக இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எதிர்பார்ப்பை மீறி இந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய ஒரு வாரத்தில் பட்டாசு விற்பனை அமோகமாக நடைபெற்று வந்தது. குறிப்பாக தீபாவளிக்கு முந்தைய இரு நாள்களான வியாழக்கிழமை (அக்.27) வெள்ளிக்கிழமை (அக்.28) 24 மணி நேரமும் பட்டாசு விற்பனை நடைபெற்றது.
இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் மட்டும் ரூ.21 கோடிக்கு பட்டாசு விற்பனையானதாகவும் தமிழகம் முழுவதும் சுமார் ரூ.1000 கோடிக்கு பட்டாசு விற்பனை ஆகியுள்ளதாகவும்பட்டாசு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.