நலம் வாழ நல்ல சோறு அவசியம்
அரிசிச் சோற்றை அன்னமென்றும் அமுதென்றும் கொண்டாடியவர்கள் தமிழர்கள். காலங்காலமாக நம் முன்னோரின் உடல் வளர்த்து, உயிர் வளர்த்த அமுத உணவை, இன்று உடல்நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஒதுக்க ஆரம்பித்துள்ளோம். இயல்பான உணவாக, இயற்கையான உணவாக இருந்த அரிசியை வெள்ளை வெளேர் என இருந்தால்தான் ஆரோக்கியம் என நம்பி, பாலிஷ் செய்ததில் சர்க்கரை நோயையும், உடல் பருமனையும் சம்பாதித்துக்கொண்டதுதான் மிச்சம். பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்ட பிறகு இப்போது மீண்டும் சிவப்பு அரிசி, கறுப்பு அரிசி என பாரம்பர்யத்தை நோக்கி ஓடுகிறோம். தமிழ்நாட்டில் மட்டுமே 50,000 பாரம்பர்யமான நெல் வகைகள் இருந்தன என்கிறார்கள். இதில் பெரும்பாலானவை விதை நெல்கூட இல்லாது அழிந்துபோயின. இயற்கை விவசாய ஆர்வலர்களின் முயற்சியால் தற்போது 150-160 நெல் வகைகள் பாதுகாக்கப்பட்டு உள்ளன. இவற்றில் முக்கியமான சில வகை அரிசிகளின் மருத்துவக் குணங்கள் வியப்பில் ஆழ்த்தக்கூடியவை.
மாப்பிள்ளை சம்பா
இளவட்டக்கல்லை தூக்கினால் தான் பெண் கொடுப்பது என்ற வழக்கம் இருந்தது. அதற்கான சத்துத் தேவையைப் பூர்த்திசெய்ய, 48 நாட்களுக்கு மாப்பிள்ளை சம்பா அரிசியைச் சமைத்துத் தருவார்கள். விருந்துகளுக்கான சிறப்பு உணவு இது. அவ்வளவு நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது. வைட்டமின் பி, தயமின் நிறைவாக உள்ளன. உடனடி ஆற்றல் கிடைக்கும். சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும். அனைத்து நரம்புப் பிரச்னைகளுக்கும் நல்லது. நரம்புகளைப் பலப்படுத்துவதால், வாதம் போன்ற உடல் பாகங்கள் செயலிழப்பு (Paralytic) நோயாளிகள் இதைச் சாப்பிட்டுவர, நல்ல முன்னேற்றம் தெரியும்.
ஒரு கிலோ ரூ90 – ரூ120
குள்ளக்கார்
ஆன்டிஆக்ஸிடன்ட், துத்தநாகம், இரும்புச்சத்து நிறைந்துள்ளன. கெட்ட கொழுப்பைக் கரைக்கும். செரிமானம் மெதுவாக நடப்பதால், பசி எடுப்பது தாமதமாகும். இதனால், உணவு எடுத்துக்கொள்ளும் அளவு தானாகவே குறையும். உடல் எடை குறைக்க நினைப்போர் இதைச் சாப்பிடுவதால், சாப்பிடும் அளவு குறைவாகும். அதேசமயம் வயிறும் நிறையும். சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
ஒரு கிலோ ரூ70 – ரூ90
கருங்குருவை
நம்ம ஊர் ‘காயகல்பம்’ இது. இதன் ‘காடி நீர்’ சித்த மருந்துகள் தயாரிக்கப் பயன்படும். உள்ளுறுப்புகளைப் பலப்படுத்தக்கூடியது. மூட்டு, முதுகு, கழுத்துவலி நீங்கும். கறுப்பு நிறம் கொண்ட மூலிகை, அரிசிகளில் ஃபைட்டோ கெமிக்கல்ஸ் அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். தேவையில்லாத ஊளை சதை கரையும். இதய அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கும். மூளைச் சோர்வைச் சரிசெய்யும்.
ஒரு கிலோ ரூ90 – ரூ120
காட்டுயானம்
இந்தப் பயிர் விளையும் இடத்தில் யானை புகுந்தாலும் தெரியாது என்பதால் இந்தப் பயிரைக் காட்டுயானம் என்பர். எட்டு அடிக்கு மேல் வளரும். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற அரிசி. பசியைத் தாமதப்படுத்தும். இந்த அரிசி செரிமானம் ஆகி, கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் குளுக்கோஸை சேர்ப்பதால், பயணங்களில் சாப்பிடச் சிறந்தது. நீடித்த எனர்ஜி கிடைக்கும்.
ஒரு கிலோ ரூ100 – ரூ120
காலாநமக்
புத்தர் சாப்பிட்ட அரிசி இது. ஒருவேளை சாப்பிட்டாலே போதும், பசி எடுக்காது. தவம், தியானம் செய்பவர்கள், பயணம் செய்பவர்களுக்கு இந்த அரிசி ஏற்றது. நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பதால், புத்த பிட்சுக்கள் இன்றும் பயன்படுத்துகின்றனர். இந்த அரிசியை நாம் குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளலாம். உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம் உள்ளிட்டப் பிரச்னைகளைப் போக்கும்.
ஒரு கிலோ ரூ120 – ரூ125
சிவப்பு மற்றும் கறுப்புக் கவுனி
செட்டிநாட்டுச் சமையலில் பெரும்பங்கு கவுனி அரிசிக்கு உண்டு. ஆன்டிஆக்ஸிடன்ட், பைட்டோ கெமிக்கல்ஸ், தயமின், வைட்டமின் பி நிறைந்துள்ளன. அசைவம் சாப்பிடாதவருக்கு வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் சத்துக்கள் கிடைக்காது. அவற்றை இந்த அரிசியிலிருந்து பெறலாம். நச்சுக்களை நீக்கும். பாம்புக் கடி, தேள் கடி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அரிசியைச் சமைத்துக்கொடுக்கும் பழக்கமும் உண்டு. புட்டு செய்ய, சத்துமாவு தயாரிக்க ஸ்பெஷலான அரிசி.
ஒரு கிலோ (சிவப்புக் கவுனி) ரூ90 – ரூ100
ஒரு கிலோ (கறுப்புக் கவுனி) ரூ120 – ரூ180
பூங்கார்
பெண்களுக்கான பிரத்யேக அரிசி. கர்ப்பிணிகளுக்கு தொடர்ந்து இந்த அரிசியில் கஞ்சி வைத்துக் கொடுத்துவர, சுகப்பிரசவத்துக்கு உதவும். எலும்புகளை வலுப்படுத்தும். யூடெரின் (Uterine Tonic) டானிக்காகச் செயல்பட்டு, சீரற்ற மாதவிலக்கைச் சரிசெய்யும். பூப்பெய்தும் காலங்களில் இந்த அரிசியில் புட்டு செய்து சாப்பிட்டுவர, இடுப்பு, வயிறு, கால் வலி நீங்கும்.
ஒரு கிலோ ரூ80 – ரூ100
கிச்சலி சம்பா
பொன்னியிலிருந்து பாரம்பர்ய அரிசி பழக்கத்துக்கு மாற முதல் அடியாக இந்த கிச்சலி சம்பாவைப் பயன்படுத்தலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உணவளிக்க, கிச்சலி சம்பா பயன்படுத்துகின்றனர். இந்த அரிசி, சிறந்த நச்சுநீக்கியாக (Detoxifier) செயல்படுகிறது.
ஒரு கிலோ ரூ70 – ரூ80
கொட்டாரம் சம்பா
குழந்தைகளுக்கான பிரத்யேக அரிசி. இதில் குழந்தைகளுக்கு கஞ்சி, புட்டு செய்து கொடுத்தால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய தேவையே இருக்காது. பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பது மேம்படும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. நார்ச்சத்து நிறைந்திருப்பதால், செரிமான மண்டலத்தை மேம்படுத்தும். வயிற்று மந்தம் நீங்கும். மலச்சிக்கல், வயிற்றுத் தொந்தரவுகளைத் தடுக்கும்.
ஒரு கிலோ ரூ120 – ரூ125