வீட்டுக் கடன் விண்ணப்பிக்கப் போறீங்களா?

வீட்டுக் கடன் விண்ணப்பிக்கப் போறீங்களா?

201601081820070275_Home-LoanConsider-interest-rates_SECVPFவீடு கட்ட, வீடு வாங்க நம்மில் பலரும் வங்கிக் கடனைத்தான் சார்ந்திருக்கிறோம். வங்கிகள் பலவும் வீட்டுக் கடன் வழங்க ஆர்வத்துடன் செயல்படுகின்றன. மற்ற கடன்களைக் காட்டிலும் வீட்டுக் கடனில் பல சிறப்பம்சங்களும் இருக்கின்றன. கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு வங்கிகள் கூடுதல் கால அவகாசத்தை வீட்டுக் கடன் திட்டத்தில் தருகின்றன. ஆனால் வங்கிக் கடன் என்றவுடன் சட்டென முடிந்துவிடும் விஷயம் இல்லை. வங்கிக் கடன் வாங்குவதில் கவனிக்கத்தக்க பல விஷயங்கள் இருக்கின்றன.பொதுவாக வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த வங்கிகள் 5 ஆண்டுகளில் இருந்து 30 ஆண்டுகள் வரையிலும் கால அவகாசம் தருகின்றன.

கடனைத் திருப்பிக் கட்டுவதற்கு நீண்ட கால அவகாசம் இருந்தாலும் நிபந்தனைகள் உண்டு. கடன் பெறும் நபர், பணியிலிருந்து ஓய்வு பெறும் காலத்துக்குள் இ.எம்.ஐ. முடிந்துவிடும் கால அவகாசத்தைத்தான் வங்கிகள் தருகின்றன. இல்லையெனில் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், இ.எம்.ஐ. செலுத்துவதற்கான வருமானம் இருக்கக்கூடிய நபராக இருந்தால், அதிகபட்சம் 70 வயது வரை கடனை அடைக்க அவகாசம் தரப்படும்.

ஆனால், அதில் சில நிபந்தனைகள் இருக்கின்றன. கடன் பெறும் நபர், 60 வயது பூர்த்தியான பிறகு அவகாசம் கோரும்பட்சத்தில் அவரது வாரிசுகள் இந்தக் கடனுக்கு எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும். கூட்டுக் கடன் மூலம் கடன் வாங்கியிருக்கும்பட்சத்தில் இணைக் கடன் வாங்கியிருப்பவர் அதற்கான உத்திரவாதத்தை அளிக்க வேண்டும்.

நாம் கடன் விண்ணப்பம் அளித்ததும் வங்கிகள் கடன் அளிப்பதில்லை. நம்முடைய வருமானம் நமது வீட்டுச் செலவுக்குப் போதுமானதாக இருக்குமா என்பதைச் சரிபார்க்கும். மாத வருமானத்தில் இருந்து உத்தேச வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ., பி.எஃப். உள்ளிட்ட அனைத்து வகை பிடித்தங்களும் போக, குறைந்தபட்சம் 35 சதவீதமாவது குடும்பச் செலவுகளுக்காக இருக்குமாறு வங்கிகள் பார்க்கின்றன. ஏனெனில் நமது வருமானம் முழுவதையும் இ.எம்.ஐ. கட்டிவிட்டால் குடும்பச் செலவுக்குத் திண்டாடக்கூடாது என்பது ஒரு காரணமாக இருந்தாலும் இ.எம்.ஐ. கட்டுவதில் சிரமம் ஆக வாய்ப்புண்டு என்பதுதான் பிரதானக் காரியம்.

இவை அல்லாது நம் வருமானத்துக்கான சான்று, சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட மனைப் பத்திரம், தாய்ப் பத்திரம், 13 ஆண்டுகளுக்கான வில்லங்கச் சான்றிதழ், விற்பனைப் பத்திரத்தின் நகல், சட்ட வல்லுநரின் கருத்து, அங்கீகாரம் பெற்ற மனைக்கான வரைபட நகல், பொறியாளரின் வீட்டின் மதிப்பீடு குறித்த அறிக்கை ஆகியவை வீட்டுக் கடன் விண்ணப்பிக்க அவசியமான ஆவணங்கள் ஆகும். இவற்றுடன் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் வங்கிகளை அணுகினால் வங்கிகள் பரிசீலித்து வீட்டுக் கடன் அளிக்கும்.

Leave a Reply