மோடியின் அதிரடி அறிவிப்புக்கு காங்கிரஸ், திரிணாமல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு அறிவித்த அதிரடி அறிவிப்புக்கு கிட்டத்தட்ட 70% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்று ஒருநாள் கொஞ்சம் சிரமம் இருந்தாலும் கருப்புப்பணத்தை சரியாக வீழ்த்திய விக்கெட் இதுதான் என்று பலரும் பாராட்டி வருகின்றனர். கருப்பு பணம் வைத்திருக்கும் முதலைகளும் உள்ளுக்குள் தங்கள் கவலையை வைத்து கொண்டு வெளியே இந்த அறிவிப்பை பாராட்டுவது போல் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் மற்றும் திரிணாமல் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கருப்பு பணத்தை ஒழிக்க இந்த திட்டம் சரியானதுதான் என்றாலும் ஏழை, எளிய நடுத்தர மக்கள் இந்த அறிவிப்பால் பெரும் குழப்பமும் அதிர்ச்சியும் ஆகியுள்ளதாக அக்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன
மேலும், புதிய அறிவிப்பைக் கையாள நமது நாட்டின் வங்கித்துறை தயாராக உள்ளதா என்றும், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்துவது சரியானதா என்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.
இதேபோல் திரிணாமல் காங்கிரஸ் கட்சி, பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள இந்த அறிவிப்பை பிரதமர் மோடி உடனே வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.