ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: கடைசி நிமிடத்தில் புனே அணி த்ரில் வெற்றி.
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற போட்டி ஒன்றில் மும்பை அணியை புனே அணி 89வது நிமிடத்தில் ஒரு கோல் போட்டு தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம் புனே அணி தற்போது 4வது இடத்தில் உள்ளது.
நேற்றைய போட்டியில் புனே மற்றும் மும்பை அணிகள் ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக விளையாடின. இரு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்த நிலையில் இரு அணிகளின் கோல்கீப்பர்களின் சிறப்பான ஆட்டத்தால் ஆட்டத்தின் 89வது நிமிடம் வரை எந்த அணியும் கோல்போடவில்லை
ஆட்டம் முடிவடைய ஒரு நிமிடம் மட்டுமே இருந்த நிலையில் புனே அணியின் நாராயண் தாஸ் அடித்த ஷாட்டை மும்பை கோல் கீப்பர் அல்பினோ கோம்ப்ஸ் முன்னேறி வந்து தாவி குதித்து தடுத்தார். ஆனால் பந்து அவரது கையில் சிக்காமல் நழுவி சென்ற சமயத்தில் ஒரே ஒரு நொடியில் புனே அணியின் மாற்று ஆட்டக்காரர் எவ்ஜினி லிங்டோ சாதுர்யமாக பந்தை வலைக்குள் அனுப்பி கோலாக்கினார். இந்த கோலின் மூலம் புனே அணி 1-0 என்ற கோல் கணக்கில் மும்பையை தோற்கடித்தது.