உரிய ஆவணங்கள் இல்லாமல் நேர்மையாக சம்பாதித்த பணத்தை என்ன செய்யலாம்?
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடியின் அறிவிப்பால் கருப்புப்பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமின்றி நேர்மையாக சம்பாதித்து அதே நேரத்தில் வங்கி கணக்கு இல்லாமல் பெரும் தொகை வைத்திருப்பவர்களுக்கும் சிக்கலாக உள்ளது. ஒருவர் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேல் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தும்போது, அது அவரது வருமானத்துக்கு பொருந்தாத வகையில் இருந்தால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப் படும் என்ற அரசின் அறிவிப்பே இதற்கு காரணம்.
இந்நிலையில் நேர்மையாக சம்பாதித்து அதே நேரத்தில் வங்கி கணக்கு இல்லாமல் இருப்பவர்களுக்கு ஒருசில ஆலோசனைகள் இதோ:
1. நேர்மையான வழியில் பணம் சம்பாதித்த்து ரூ.2.5 லட்சத்துக்கு மேல் பணம் டெபாசிட் செய்ய தங்களுடைய ஆதார் அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள சான்றிதழைக் காண்பித்தால் போதுமானது.
2. முறைசாரா தொழில்புரிபவர்கள் உதாரணமாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தான் ஆட்டோ ஓட்டி சம் பாதித்த ரூ.3 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்ய விரும்பினால் அவர் தனது ஆட்டோ ஓட்டுநர் உரிமத்தைக் காட்டி பணத்தை டெபாசிட் செய்யலாம். அதேபோல் ரியல்எஸ்டேட் முகவர்கள், முகவர் தொழில் மூலம் கிடைத்த தரகு தொகையை, நிலம் விற்றோர், வாங்கியோரிடமிருந்து கடிதம் பெற்று, வங்கியில் டெபாசிட் செய்யலாம்.
3. விவசாயிகள் தாம் சம்பாதித்த தொகை இன்ன விவசாய நிலத்தில் விவசாயம் செய்ததன் மூலம் சம்பாதித்தது என்பது குறித்த ஆதாரத்தை அளிக்கலாம். குத்தகை விவசாயிகள், கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்ற சிட்டா, அடங்கல் போன்ற ஆவணங்களை ஆதாரமாக தரலாம்.
4. சிறு வணிகர்கள், மளிகைக் கடைக்காரர்கள், தினசரி வருவாயை வங்கியில் செலுத்தும் பழக்கம் இல்லாதவர்கள். அவர்கள் கையில்தான் பணம் வைத்திருப்பார்கள். அவர்கள் விளக்கக் கடிதம் ஒன்றை வங்கியில் செலுத்தினால் போதும். பணம் டெபாசிட் செய்ய அனுமதிக்கப்படும்
5. ஒரு குடும்பத்தில் 4 பேர் இருக்கிறார்கள் என்றால், அனைவரது பெயரிலும் பிரித்து பணத்தை டெபாசிட் செய்யலாம். இது யாரையும் ஏமாற்றும் நோக்கம் அல்ல.
6. ஒருவர் நியாயமாக சம்பாதித்த பணத்துக்கு வருமான வரி செலுத்தியிருந்தால், அதை சட்டப்படி முதலீடு செய்ய முடியும். கணக்கில் காட்டப்படாத பணத்தைக் கொண்டு நகை, வீடு, மனை போன்றவற்றில் முதலீடு செய்ய முடியாது. அப்படியே செய்தாலும், பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
7. ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்பவர்கள் அனைவருக்கும் அபராதம் விதிக்கப்படாது. வங்கியில் அதிக தொகையை செலுத்தும் வாடிக்கையாளர்களின் விவரங்கள் பெறப்பட்டு, அவற்றை ஆய்வு செய்யும்போது உரிய ஆவணங்கள் இல்லையென்றால் மட்டுமே அபராதம் விதிக்கப்படும்.
இன்றைய சூழலில் அதிக தொகை இருந்தால் அதை வங்கியில் டெபாசிட் செய்வதைத் தவிர வேறு சட்டபூர்வ வழிகள் இல்லை என்பதுதான் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை