மூவிங் கியர் உறுதிமொழி என்றால் என்னவென தெரியுமா?

மூவிங் கியர் உறுதிமொழி என்றால் என்னவென தெரியுமா?

1தமிழகத்தில் ஓடும் அரசு பேருந்தில் பயணம் செய்வது என்றாலே நம்மில் பெரும்பாலானோருக்கு பிடிப்பதில்லை. காரணம் சில்லறை தட்டுப்பாடு, ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் செயல்பாடு, கால விரையம், வசதி குறைவு போன்ற பல குறைபாடுகளை சொல்லலாம். ஆனால் தரத்தில் மோசமாக இருந்தாலும் பாதுகாப்பு என எடுத்துக்கொண்டால் அரசு போக்குவரத்து கழகம் ஓரளவு பாதுகாப்பானது தான்.

இதை உணர்த்தும் வகையில், சேலம் மண்டலத்திற்கு உட்பட அரசுப் பேருந்துகளில் பணியாற்றும். பணியாளர்களும், நடத்துநர்களும், ஓட்டுநர்களும் மூவிங் கியர் உறுதி மொழி ஏற்பு என்ற வாசகம் அடங்கிய ஒரு உறுதிமொழி ஏற்பு அட்டை ஒன்றை சட்டையில் அணிந்து பணிக்கு வந்து இருந்தனர்.

மூவிங் கியர் உறுதிமொழி குறித்து நடத்துநர் ஒருவரிடம் பேசினோம். “பர்ஸ்ட் கியரை தான் மூவிங் கியர் என அழைக்கிறோம். பர்ஸ்ட் கியரில் இருக்கும் போது பேருந்தானது மூன்று கிமீ வேகத்தில் தான் செல்ல வேண்டும். இவ்வாறு மூன்று கி.மீ செல்லும் போது தான் பேருந்தை நிறுத்தி ஏறவோ, இறங்கவோ பயணிகளுக்கு பாதுக்காப்பானது. எங்களுக்கு பயணிகளின் பாதுகாப்பு தான் முக்கியம். அதை வலியுறுத்தவே இந்த நவம்பர் மாதம் முழுவதும் அதாவது ஒன்றாம் தேதி முதல் முப்பதாம் தேதி வரை மூவிங் கியர் உறுதிமொழி மாதம் (moving gear promise month) என்ற பெயரில் அனைத்து பேருந்து போக்குவரத்து ஊழியர்களும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். அந்த உறுதி மொழி அட்டையில் “பேருந்து நிலையம் நிறுத்தங்களில் பயணிகள் பாதுகாப்பாகவும் இலகுவாகவும் இறங்கிடவும் மூவிங் கியர் பயன்படுத்திட உறுதி மொழி ஏற்பேன்” என இடம்பெற்று இருக்கும் என்றார். எரிபொருள் சிக்கனம் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க வேண்டும் சாலையில் இடதுபுறமாக வாகனங்களை இயக்க வேண்டும் போன்ற உறுதிமொழிகளும் கூடுதலாக எடுக்கப்பட்டன. இந்த மாதிரியான புதிய முயற்சி சேலம் மண்டலத்தில் மட்டுமே பின்பற்றப்படுகிறது ,”என்றார்.

இதுகுறித்து சேலம் பேருந்து நிலையத்தில் இருந்த ரவி என்ற பயணியிடம் பேசியபோது, “உண்மையிலேயே இந்த உறுதி மொழி ஏற்பு அட்டை அணிந்த உடனே கண்டக்டர்க்கும், டிரைவர்க்கும் மனதில் ஒரு வித மாற்றத்தை கொண்டு வந்துள்ளன. நான் பொதுவாகவே தனியார் பேருந்தில் தான் பயணம் செய்வேன். ஆனால் இன்று அவர் அணிந்து இருந்த உறுதிமொழி அட்டையை பார்த்து தான் இந்த பேருந்தில் ஏறினேன். கண்டக்டரும் முகமலர்ச்சியோடு டிக்கெட் கொடுத்தார். நான் பயணம் செய்த பேருந்தின் டிரைவரும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு பேருந்தை ஓட்டி வந்தார். இதற்காக இவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்,” என்றார்.

இதை மதித்து செயல்படவும் செய்கிறார்கள் நடந்துநர்களும் ஓட்டுநர்களும். சேலம் பேருந்து நிலையத்தில் வயதான முதியவர் ஒருவர் பேருந்து மாறி ஏறியதை அறிந்த நடத்துநர் உடனே ஓட்டுநரிடம் தகவல் தெரிவித்து பேருந்தை நிறுத்தி இறக்கிவிட்டு அவர் செல்ல வேண்டிய பேருந்தில் ஏற்றிவிட்டு வந்தார். வழக்கமாக கடிந்து கொண்டு தூரம் சென்று நிற்கும் பேருந்து அதே இடத்தில் நின்றதோடு, பயணியை கனிவாக இறக்கி விடவும் செய்தனர்.

இந்த நடவடிக்கை போக்குவரத்து துறையினர் மீது பயணிகளுக்கு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த மாதம் மட்டுமின்றி வருடம் முழுவதும் இது போன்று பயணிகள் மீது அக்கறை கொண்டு செயல்பட்டால் அரசு போக்குவரத்து துறையை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லலாம். சேலத்தை பின்பற்றி மற்ற அரசு பேருந்து போக்குவரத்து மண்டலங்களிலும் இதை அமலாக்கலாம்.

Leave a Reply