புதுச்சேரி மத்திய பல்கலை.க்கு செல்ல நுழைவு அனுமதிச் சீட்டு கட்டாயம்
புதுவை மத்திய பல்கலை.க்குச் செல்ல நுழைவு அனுமதிச் சீட்டு கட்டாயம் என பல்கலை. நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பல்கலை. பாதுகாப்பினை பலப்படுத்தும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மத்திய பல்கலை. 780 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள இந்தப் பல்கலை.யில் தீவிரவாதிகள், வெளியாள்கள் நுழைய முடியாதபடி பாதுகாப்பினை பலப்படுத்த நிர்வாகம் முடிவு செய்தது. இதன் முதற்கட்டமாக பல்கலை.யில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், பேராசிரியர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், வாகன ஓட்டுநர்கள் அனைவருக்கும் புகைப்படம், ஆதார் எண், வாக்காளர் அட்டை நகலுடன் கட்டாயமாக நுழைவு அனுமதிச் சீட்டு பெற்றுக்கொள்ள உத்தரவிடப்பட்டது.
இரண்டாம் கட்டமாக தற்போது பல்கலை.யில் நுழைவு வாயிலில் வாகனங்கள் நுழையவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பல்கலை. முதல் நுழைவு வாயில் வழியாக காலை 9 மணி முதல் 10 மணி வரை வாகனங்கள் நுழைய அனுமதிக்கப்படும். மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாகனங்கள் வெளியேற அனுமதிக்கப்படும். மற்ற நேரங்களில் பல்கலை. வாயில் பூட்டப்படும்.
அதேநேரம், நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு எந்தத் தடையும் இல்லை. பல்கலை. இரண்டாவது நுழைவு வாயில் வழியாகச் செல்லவும், வெளியேறவும் எந்தத் தடையும் இல்லை. இதற்கான உத்தரவை பல்கலை. பதிவாளர் ராமச்சந்திரன் பிறப்பித்துள்ளார்.