பங்குச் சந்தையில் கடும் சரிவு: சென்செக்ஸ் 698 புள்ளிகள் வீழ்ச்சி
நேற்று இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது. அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டுட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டது மற்றும் அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருப்பது போன்ற காரணங்களால் பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டிருக்கிறது. வட்டி விகிதம் உயர்வதினால், சர்வதேச முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை வளரும் நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு மாற்றுவதற்கு வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இந்தியாவில் இருந்து அந்நிய முதலீடு வெளியேறி இருப்பதால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவடைந்திருக்கிறது. தவிர முதலீட்டாளர்களிடையே லாபத்தை வெளியே எடுக்கும் போக்கு அதிகமாக இருந்ததாலும் இந்திய பங்குச்சந்தைகள் சரிந்து முடிந்தன.
நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 698.86 புள்ளிகள் சரிந்து 26818 புள்ளியில் முடிவடைந்தது. அதேபோல நிப்டி 229.45 புள்ளிகள் சரிந்து 8296 புள்ளியில் முடிவடைந்தது. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 3 சதவீதத்துக்கு மேல் சரிந்து முடிந்தன.
அனைத்து துறை குறியீடுகளும் சரிவடைந்தன. அதிகபட்சமாக ஆட்டோ துறை குறியீடு 4.53 சதவீதம் சரிவடைந்தது. அதனை தொடர்ந்து கன்ஸ்யூமர் டியூரபிள் 4.19%, ரியால்டி 4.00%, எப்எம்சிஜி குறியீடு 3.24 சதவீதம் சரிவடைந்தன.
சென்செக்ஸ் பட்டியலில் எம் அண்ட் எம் (-6.02%), அதானி போர்ட்ஸ் (-5.86%), ஐசிஐசிஐ வங்கி (-5.32%) மற்றும் ஏசியன் பெயின்ட்ஸ் (-5.02%) சரிந்து முடிந்தன. சென்செக்ஸ் பட்டியலில் சன் பார்மா பங்கு மட்டும் 3.3 சதவீதம் உயர்ந்து முடிவடைந்தது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் காலாண்டு முடிவுகள் நேற்று வெளியானது. நிகர லாபம் 34.5 சதவீதம் சரிந்து 2,538 கோடியாக இருக்கிறது. இதனால் இந்த பங்கு நேற்றைய வர்த்தகத்தில் 3 சதவீதம் சரிந்து முடிந்தது.
ரூபாய் மதிப்பு சரிவு
அந்நிய முதலீடுகள் வெளியேறி வருவதால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து நேற்றைய வர்த்தகத்தில் சரிந்தது. கடந்த 11 வாரங்கள் இல்லாத அளவுக்கு ரூபாய் மதிப்பு சரிந்தது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 62 காசுகள் சரிந்து ஒரு டாலர் 67.25 ரூபாயில் முடிவடைந்தது.