மோடியின் துணிச்சலான முடிவுக்கு சீன பத்திரிகை பாராட்டு

மோடியின் துணிச்சலான முடிவுக்கு சீன பத்திரிகை பாராட்டு

Narendra-Modi-Startup-India-standup-indiaரூ.500, ரூ.1,000 ஆகியவை செல்லாது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு சீன அரசுப் பத்திரிகை பாராட்டு தெரிவித்துள்ளது. இதுவொரு துணிச்சலான நடவடிக்கை என்றும் இந்த முடிவை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்றும் அந்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

சீனாவில் இருந்து வெளிவரும் “குளோபல் டைம்ஸ்’ என்ற நாளிதழ் இதுகுறித்து ஒரு கட்டுரையை எழுதியுள்ளது. அந்த கட்டுரையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் உண்மை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை பிரதமர் மோடி எடுத்துள்ளார். கள்ளச் சந்தையில் பணத்தின் மூலமே சட்டவிரோத வர்த்தகம் நடைபெறுகிறது. இந்தியாவில் உள்ள மொத்த பணப் புழக்கத்தில் 80 சதவீதம், ரூ.500, ரூ.1,000 வாயிலாகவே நடக்கிறது. தற்போது இந்திய அரசு எடுத்துள்ள புதிய நடவடிக்கையால், ஊழலை முழுவதும் அகற்றிவிட முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

இந்தியப் பிரதமராக பதவியேற்ற நாளில் இருந்து, கருப்புப் பணம், ஊழல் மற்றும் வரி ஏய்ப்புக்கு எதிராக மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அந்த நடவடிக்கைகளில் பெரும்பாலானவை தெளிவற்றவை; அவற்றால் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் இயலாது. அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை செல்லாது என்ற இந்திய அரசின் அறிவிப்பை அபாயகரமானதாக நாம் கருதலாம். ஆனால் அது துணிச்சலான மற்றும் தீர்க்கமான முடிவாகும்.

அதே சமயத்தில் ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவிப்பதால் மட்டுமே ஊழலற்ற நாட்டை ஏற்படுத்திவிட முடியாது. ஊழலற்ற நாட்டை உருவாக்க மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும். இதற்கு ஆட்சியமைப்புகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில், தேவைப்பட்டால் சீனாவிடம் இருந்து ஆலோசனைகளை இந்தியா கேட்டுப் பெறலாம் என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

Leave a Reply