போலந்து அதிபரின் உடல் 6 ஆண்டுகளுக்கு பின் தோண்டி எடுக்கப்பட்டது ஏன்? திடுக்கிடும் தகவல்
கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் 10-ந்தேதி போலந்து அதிபர் எலக்கர்கஷியன்ஸ்கி தனது மனைவி மரியா காக்ஷியன்ஸ்கியுடன் விமானத்தில் பயணம் செய்த போது அந்த விமானம் ரஷ்யாவில் உள்ள ஸ்மோலென்ஸ்க் என்ற இடத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் போலந்து அதிபர் எலக்கர்கஷியன்ஸ்கி, அவரது மனைவி உள்பட 96 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்தில் பலியாகிய அனைவரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் அதிபரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரது உடலை தோண்டி எடுத்து மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ஆளும் கன்சர் வேடிஸ் கட்சி வலியுறுத்தியது.
இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கு ஒன்று விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அடக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் எலக் காக்ஷியான்ஸ்கி அவரது மனைவி மரியா ஆகியோரின் உடல்களை தோண்டியெடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய நேற்று போலந்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் அடிப்படையில் நேற்று அதிபர் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் கல்லறையில் இருந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. மறு பிரேத பரிசோதனை இன்று அல்லது நாளை நடத்தப்படும் என்றும் பிரேத பரிசோதனை அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் போலந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.