கருப்பு பணமெல்லாம் வெள்ளையாக மாறுவது இப்படித்தான். தில்லாலங்கடி வேலைகள்

கருப்பு பணமெல்லாம் வெள்ளையாக மாறுவது இப்படித்தான். தில்லாலங்கடி வேலைகள்

black money500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தப்பிறகு கணக்கில் காட்டப்படாத கறுப்புப் பணம், வெளிவரத் தொடங்கி இருக்கிறது. அதை அரசுக்கே அல்வா கொடுக்கும் வகையில் குறுக்கு வழியில் பணம் மாற்றப்பட்டு வருவதாக ரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 8ம் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் கையில் வைத்திருந்த பணத்தை மாற்ற மக்கள் வங்கிகளுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதன்காரணமாக ஒவ்வொரு வங்கி முன்பும் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றன. பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்களை பெறுவதே மக்களுக்கு ஒரு வேலையாக மாறி இருக்கிறது. இந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கென ஏஜென்ட்களும் புற்றீசல் போல ஒவ்வொரு பகுதிகளிலும் முளைத்துள்ளனர். இத்தகைய ஏஜென்சிகள் சிறியளவில் தொடங்கி பெரியளவில் வரை பழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றிக் கொடுக்க தயாராக உள்ளனர். இதற்காக குறிப்பிட்ட சதவிகிதம் கமிஷனாகவும் பெறப்படுகிறது. லட்சக்கணக்கான தொகையை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பு அதிர்ச்சிக்குள்ளாக்கினாலும், அதிலிருந்து அவர்கள் குறுக்கு வழியில் தப்பித்து வருகின்றனர்.

இதுகுறித்து விவரம் தெரிந்தவர்கள் கூறுகையில், “கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அரசியல்வாதிகள் அதை கணக்கு காட்ட பல வழிகளை பின்பற்றுகின்றனர். கல்வி நிறுவனங்களை வைத்திருப்பவர்கள், மாணவர்கள் மற்றும் அங்கு வேலைப் பார்ப்பவர்களுக்கு குறிப்பிட்ட தொகையை கொடுத்து மாற்றி வருகின்றனர். வேலை பார்ப்பவர்களுக்கு மூன்று மாத ஊதியத்தை முன்பணமாகவும் சிலர் கொடுத்துள்ளனர். மாணவர்கள், பணத்தை மாற்றிக் கொடுத்தால் அவர்களது கல்வி கட்டணத்தில் சில சலுகைகளையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கொடுக்கின்றன.

தொழிற்சாலைகளிலும் ஊழியர்களுக்கு ஊதியத்தை முன்கூட்டியே கொடுத்து கறுப்புப் பணத்தை கணக்கு காட்டி வருகின்றனர். இன்னும் சிலர், தங்கள் நிறுவனத்தில் வேலைப்பார்ப்பவர்களிடம் தலா 2.5 லட்சம் ரூபாயை கொடுத்து அவர்களது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து வருகின்றனர். இதற்காக அவர்களது ஏ.டி.எம் கார்டுகளை பணம் கொடுத்தவர்கள் வாங்கி வைத்துக் கொள்கின்றனர். உதாரணத்துக்கு ஒரு நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றினால் அவர்களிடம் தலா 2.5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தாலே கோடிக்கணக்கான கறுப்புப் பணத்தை கணக்கு காட்டி விடும் சூழ்நிலை நிலவுகிறது. பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு வந்தவுடன் காலியாக கிடந்த வங்கிக்கணக்குகளில் பணம் டெபாசிட் செய்யப்படுகிறது. 2.5 லட்சம் வரை வரி விலக்கு என்பதால் மக்களும் கணக்குப்பார்த்து அதற்கேற்ப பணத்தை டெபாசிட் செய்து வருகின்றனர். இப்படியும் கறுப்புப் பணம் கணக்கு காட்டப்பட்டு வருகிறது” என்றனர்.

இந்த வகையில் எல்லாம் பணத்தை மாற்ற தயங்கும் சில மனசாட்சியுள்ள மனிதர்களும் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி, 6000 கோடியை ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்துள்ளார். அந்தப்பணத்துக்கு வரியாக மட்டும் அவரிடமிருந்து 5,400 கோடி ரூபாய் பிடிக்கப்பட்டுள்ளது. மீதி தொகையான 600 கோடி ரூபாய் மட்டும் அவரது கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. வேலூரில் கோயில் உண்டியலில் 44 லட்சம் ரூபாயை போட்டு விட்டு மர்மநபர் சென்றுள்ளார். இன்னும் சிலரே குப்பைத் தொட்டியிலும், கழிவு நீர் கால்வாயிலும் பணத்தை யாருக்கும் தெரியாமல் வீசி விட்டு செல்கின்றனர். இவ்வாறு மோடியில் அறிவிப்பால் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த பணம், வெளியே வரத்தொடங்கி இருக்கிறது. ஏனெனிலும் மோடியின் அதிரடி அறிவிப்பை முன்கூட்டியே தெரிந்த சில பண முதலைகள், தங்களிடமிருந்த பணத்தை கோடிக்கணக்கில் மாற்றி விட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

தங்கத்தை கூடுதல் விலைக்கும் வாங்கி கறுப்புப் பணத்தை கணக்கு காட்டி வருகின்றனர். திருமண நிகழ்ச்சி, சுப நிகழ்ச்சிகளை நடத்துபவர்களை குறி வைத்து புரோக்கர்கள் செயல்படுகின்றனர். திருமண வீட்டினரை சந்திக்கும் இந்த புரோக்கர்கள், 30 சதவிகிதம் கமிஷனை பெற்றுக் கொண்டு 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொடுக்கின்றனர். இதுதொடர்பாக வாட்ஸ்அப்பில் மெஜேஜ் அனுப்பப்படுகிறது. அந்த மெஜேஜில் இருக்கும் போன் நம்பரை தொடர்பு கொண்டால் அடுத்த சில நிமிடங்களில் வேறு நம்பரிலிருந்து புரோக்கர்கள் பேசி பணத்தை மாற்றிக் கொடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் கூறுகையில், “கறுப்புப் பணம், கள்ள நோட்டுக்களின் பயன்பாட்டை தடுக்கவே 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வங்கிகளில் குறுக்கு வழியில் கறுப்புப் பணம் மாற்றப்படுவதாக எங்களுக்கு தகவல் வந்தது. இதை தவிர்க்க பணம் மாற்றுவதில் சில விதிமுறைகளையும், காலநிர்ணயமும் மேற்கொண்டுள்ளோம். இது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தினாலும் முழுமையாக கறுப்புப் பணத்தையும், கள்ள நோட்டுக்களையும் ஒழிக்கவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரே நபர் தொடர்ந்து பணத்தை மாற்றுவதை தவிர்க்க விரலில் மை வைக்கவும் வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். அதுதொடர்பான முழுவிவரங்கள் வங்கி அலுவலர்களுக்கு சுற்றறிக்கையாக வழங்கப்படும். இதனால் ஒரே நபர் தொடர்ந்து பணத்தை மாற்ற இயலாது. மேலும் பணத்தை மாற்றிக் கொடுக்கும் புரோக்கர்களால் இனிமேல் வங்கிகளுக்கு செல்ல முடியாது” என்றனர்.

Leave a Reply