சிபிஎஸ்இ: அடுத்த கல்வியாண்டு முதல் 10-ஆம் வகுப்புக்கு மீண்டும் பொதுத் தேர்வு

சிபிஎஸ்இ: அடுத்த கல்வியாண்டு முதல் 10-ஆம் வகுப்புக்கு மீண்டும் பொதுத் தேர்வு

1சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில் 10-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மீண்டும் கட்டாயமாக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அந்த மாநில கல்வியமைச்சரை அவர் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில் 10-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வை மீண்டும் கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது. இம்முடிவு அடுத்த கல்வியாண்டில் இருந்து நடைமுறைபடுத்தப்படும். பள்ளிக் கல்வியின், குறிப்பாக அரசுப் பள்ளிகளில் அளிக்கப்படும் கல்வியின் தரத்தை உயர்த்துவதிலேயே மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.
அதேபோல், 5 மற்றும் 8-ஆம் வகுப்புத் தேர்வுகளையும் பொதுத் தேர்வுகளாக மாற்றுவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்படும். இது தொடர்பான முன்மொழிவு முதலில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும். அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் மசோதா அறிமுகம் செய்யப்படும். ராஜஸ்தானில் கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்முயற்சிகள் பாராட்டுக்குரியவை.
பின்தங்கிய மாநிலமாக 25 ஆண்டுகளுக்கு முன் அழைக்கப்பட்ட ராஜஸ்தானில் அரசுப் பள்ளிகள் அளிக்கும் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார் பிரகாஷ் ஜாவடேகர். முன்னதாக, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சிபிஎஸ்இ பள்ளிகளிலும் 10ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு முறைதான் அமலில் இருந்தது. அதன் பின் அந்த நடைமுறை மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply