அடுத்த 3 ஆண்டுகளில் விமான நிலையங்கள் இருமடங்காகும்: மத்திய விமான போக்குவரத்துத்துறை இணைஅமைச்சர் தகவல்
அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியா வில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்த்தப்படும் என மத்திய விமானப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை (சிக்கி) சார்பில் அதன் முன்னாள் தலைவர் ஜி.ராமச்சந்திரன் நினைவு மூன்றாவது நினைவு சொற்பொழிவு சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற ஜெயந்த் சின்ஹா மேலும் கூறியதாவது:
இந்தியாவில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கையை 75-லிருந்து 150-ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.
ஒரு விமான நிலையத்தை வடிவமைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. ஒரு சர்வதேச விமான நிலையத்தை உருவாக்க ஆயிரம் ஏக்கர் நிலமும், அதிகளவில் நிதியும், ஒருங்கிணைப்பும் அவசியம். விமானப் போக்குவரத்தை மேம் படுத்தவும், விமான நிலையங்களின் கட்டமைப்பை மேம்படுத்தவும், பார்க்கிங் வசதிகளை நவீனமாக்க வும் பல்வேறு செயல் திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் அருமையான, துடிப்பான பிரதமர் நம்மிடம் உள்ளார். இதன் மூலம் பழைய இந்தியா புதிய இந்தியா வாகி வருகிறது. விமானத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரு கிறது. விமானத்துறையில் பாதுகாப்பைப் பொருத்தமட்டில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள மாட்டோம்.
ராஜதானி ரயில்களை விட விமானத்தில் கட்டணம் குறைவு தான். ஆனால் விமான கட்டணம் குறித்த விழிப்புணர்வு பயணிகள் மத்தியில் குறைவாக உள்ளது. முன்கூட்டியே பயணத்தைத் திட்டமிட்டு முன்னதாகவே விமான டிக்கெட்டுக்களையும் எடுத்தால் கட்டணம் குறைவு தான்.
குறைந்த அளவிலான பயணிகளை ஏற்றிச்செல்லும் வகையில் சிறிய ரக விமானம், இந்தியாவில் இமயமலையில் தொடங்கி கடை கோடி வரை உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை இணைக்கும் வகையில் பயணிகளுக்கான ஹெலிக்காப்டர் சேவை பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளோம். இதற்கான டெண்டர் வரும் ஜனவரி, பிப்ரவரியில் நடைபெறும் என கூறினார்.