சட்டம் இனி சுலபம்!
இந்தியச் சட்டம் தொடர்பான தகவல்கள் தேவை எனில் கைகொடுக்கக்கூடிய இணையதளங்கள் இருக்கின்றன. சட்டப் பிரிவுகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளிட்ட விவரங்களைக்கூட எளிதாகத் தேடிக்கொள்ளலாம்.
ஆனால், நீதித்துறை குறித்து அவ்வளவாகத் தெளிவு இல்லாத சாமானியர்களுக்குச் சட்ட நுணுக்கங்கள் மட்டுமல்ல, சட்டப் பிரிவுகளின் வாசகங்களேகூடக் குழப்பத்தை அளிக்கலாம். சட்டங்கள் அவற்றுக்கே உரிய தனித்துவமான மொழியில் உருவாக்கப்பட்டிருப்பதுதான் இதற்குக் காரணம். சட்டம் தொடர்பான துறைகளில் புழங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு இவற்றைப் புரிந்துகொள்வதில் எந்தச் சிக்கலும் இல்லை.
எளிமையான ஆங்கிலத்தில்
இந்த நிலையில்தான் ‘நியாயா.இன்’ எனும் புதிய வலைதளம் அறிமுகமாகியிருக்கிறது. இந்தியச் சட்டங்களுக்கான இணையக் களஞ்சியமாக விளங்க வேண்டும் எனும் நோக்கத்துடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. சட்ட ஷரத்துக்களை, சட்டம் படிக்காதவர்களுக்கும் புரியக்கூடிய வகையில் எளிமையான ஆங்கில விளக்கத்துடன் தந்திருப்பதுதான் இதன் சிறப்பம்சம்.
இதுவரை 773 மத்தியச் சட்டங்களுக்கான விளக்கம் குற்றவியல் சட்டங்களின் 10 பிரிவுகளுக்கான வழிகாட்டி விளக்கம் ஆகியவை இந்தத் தளத்தில் இடம்பெற்றுள்ளன. முகப்புப் பக்கத்திலேயே இதற்கான ஐகான்கள் இடம்பெற்றுள்ளன. சட்டப் பிரிவுகளுக்கான பட்டியலும் தனியே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பிரிவை கிளிக் செய்தவுடன், அதற்கான விளக்கத்தைக் காணலாம். சட்டப் பிரிவுகள் எனில் இடப்பக்கத்தில் மூல ஷரத்துகளும், அருகே அவற்றுக்கான எளிய ஆங்கில விளக்கமும் இடம்பெறுகின்றன. முக்கியமான சொற்களுக்கான விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன.
வழிகாட்டிப் பகுதியில், அனைவருக்கும் கல்வி உரிமை, குடும்ப வன்முறை, பாலியல் தொல்லை, ஊழலுக்கு எதிரான பிரிவு உள்ளிட்டவற்றுக்கான விரிவான விளக்கத்தைக் காணலாம். சட்டம் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களும் இடம்பெற்றுள்ளன.
பயனர் நோக்கில் உருவாக்கம்
இணைய உலகில் எல்லாமே பயனர் நோக்கிலேயே அமையும்போது சட்டத்திற்கான விளக்கத்தையும் பயனர் நோக்கில் அளிக்கிறது இந்தத் தளம். சட்டங்கள் பயனர்களை மனதில் கொண்டு எழுதப்படவில்லை. அந்தக் குறையைப் போக்கவே இந்த முயற்சி என்கிறார் இந்தத் தளத்தை உருவாக்கிய குழுவில் முக்கியப் பங்கு வகிக்கும் டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞரான ஸ்ரீ ஜோனி சென். பெங்களூரு மற்றும் அமெரிக்காவில் சட்டம் பயின்ற சென், மெக்கின்ஸி நிறுவனத்தில் பணியாற்றியிருக்கிறார்.
இவர் கடந்த ஆண்டு டெல்லியில் சட்டம் தொடர்பான ஆய்வு மையமான ‘விதி சென்டரில்’ பணியாற்றிக்கொண்டிருந்த போது, சட்டத்தை எளிமையாகப் புரியவைக்க உதவும் வலைதளத்தை உருவாக்கும் எண்ணம் ஏற்பட்டதாக ‘ஸ்க்ரோல்.இன்’ இணைய இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
“நீர் தொடர்பான முக்கியத் தகவல்களை அளிக்கும் ‘இந்தியா வாட்டர் போர்ட்டல்’ தளத்தை நடத்திவரும் ரோகினி நிலேகனியுடன் இதுபற்றி விவாதித்தபோது, சட்டத் துறைக்கான இதே போன்ற இணையதளம் தேவை எனும் உணர்வு வலுப்பட்டது. அதன் பிறகு 3 வழக்கறிஞர்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் இணைந்து இதனை அமைத்திருக்கிறோம்” என்கிறார். நாடு முழுவதும் உள்ள சட்ட மாணவர்கள், சட்ட வல்லுநர்கள் இதன் உருவாக்கத்தில் உதவியுள்ளதாக சென் குறிப்பிடுகிறார்.
இந்தியச் சட்டங்களுக்கான இணையக் களஞ்சியமாக இந்தத் தளம் உருவாக வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என்கிறார் அவர்.
மாநில மொழிகளிலும்…
இந்தத் தளத்தில் இணையவாசிகளும் பங்கேற்கலாம். இதில் உள்ள விளக்கத்தை மேம்படுத்த அல்லது திருத்தும் முயற்சியில் பங்களிப்புச் செலுத்தலாம். இவை தளத்தின் குழுவால் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும். இந்தத் தளத்தில் இன்னமும் முழுமையாக எல்லா சட்டங்களும் இடம்பெறவில்லை. அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆங்கிலத்தில் அமைந்திருந்தாலும் எதிர்காலத்தில் மாநில மொழிகளிலும் சேவை வழங்கும் திட்டம் இருக்கிறது என்கிறார் சென். அதே போல மாநிலச் சட்டங்கள் குறித்துத் தனிக் கவனம் செலுத்த இருப்பதாகவும், சட்டம் தொடர்பான அறிவிக்கைகள், சுற்றறிக்கைகள் போன்றவையும் இதில் இடம்பெறும் என்கிறார் சென்.
சட்டம் தொடர்பான அடிப்படைத் தகவல்களைத் தெரிந்துகொள்ள இந்தத் தளம் உதவியாக இருக்கும். ஒரு குற்றத்தைப் புகார் செய்தவுடன் என்ன நடக்கிறது, கைது செய்யப்படும் போது ஒருவரின் உரிமைகள் என்ன என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்களையும் அறியலாம். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து பொதுவாக மக்கள் மனதில் எழக்கூடிய கேள்விகளைத் தேர்வு செய்துள்ளனர்.
ஆனால் இதில் உள்ள விளக்கங்கள் சட்ட ஆலோசனையும் அல்ல, அவற்றுக்கு மாற்றும் அல்ல, இவை தகவல் நோக்கிலானவை மட்டுமே என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இணையதள முகவரி: http://nyaaya.in/