எச்1பி விசா குளறுபடிகளை விசாரிக்க டொனால்டு ட்ரம்ப் உறுதி: ஐடி நிறுவனங்கள் பாதிக்க வாய்ப்பு

எச்1பி விசா குளறுபடிகளை விசாரிக்க டொனால்டு ட்ரம்ப் உறுதி: ஐடி நிறுவனங்கள் பாதிக்க வாய்ப்பு

12எச்1பி விசாவை தவறாகப் பயன்படுத்துவது உள்ளிட்ட குளறுபடிகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள இருப்பதாக, அமெரிக்க புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.

இதற்கான நிர்வாகமட்ட ஏற்பாடுகள் அமெரிக்காவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், எச்1பி விசா மூலம் அமெரிக்காவுக்குள் இந்தியப் பணியாளர்களைக் கொண்டு சென்றுகொண்டிருக்கும் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கு பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், உலக வர்த்தகத்தை அமெரிக்காவே வழிநடத்தும் டிரான்ஸ் – பசிபிக் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஒபாமா சாம்பியனாகத் திகழும் இந்த 12 நாடுகள் டிரான்ஸ் பசிபிக் ஒப்பந்தத்தில் சீனா இல்லை. அதாவது, உலக வர்த்தக விதிமுறைகளை அமெரிக்காவே தீர்மானிக்கும், சீனா அல்ல என்பதை வலியுறுத்தும் ஒப்பந்தமாகும் இது. ஆனால் இந்த ஒப்பந்தம் தற்போது அமெரிக்க நாடாளுமன்ற ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.

இந்த ஒப்பந்தத்தை ‘அமெரிக்காவின் சீரழிவுக்குக் காரணமாகும்’ ஒப்பந்தம் என்று கூறும் ட்ரம்ப், “ட்ரான்ஸ் – பசிபிக் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதான அறிவிக்கையை வெளியிடப்போகிறேன். மாறாக, அமெரிக்காவுக்கு வேலைவாய்ப்புகளையும், தொழிற்துறைகளையும் கொண்டு வரும் நியாயமான இருதரப்பு ஒப்பந்தங்களில் பேச்சு வார்த்தை மூலம் அமெரிக்காவுக்கு நன்மை பயக்குமாறு செய்யப்போகிறோம்” என்றார்.

மேலும், அதிபராக தனது தொடக்க நாட்களில் வணிகம், எரிசக்தி, தேசியப் பாதுகாப்பு, கட்டுப்பாடு, குடியேற்றம் மற்றும் நீதி சீர்த்திருத்தங்கள் ஆகிய துறைகளே தனது நிர்வாகத்தின் கவனம் இருக்கும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தம் நாட்டின் சட்டங்களை மீட்டெடுக்கவும் நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட வேலைவாய்ப்புகளை மீண்டும் கொண்டு வரவும் என்ன செயல்திட்டங்கள் தேவை என்பதை தனது மாற்றத்துக்கான குழு திட்டமிட்டு வருவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

“என்னுடைய திட்டம் எளிமையான, மையக் கொள்கையுடையது. அமெரிக்காவின் நன்மையை முன்னிறுத்துவது. ஸ்டீல், கார்கள் அல்லது மருத்துவம் என்று எதுவாக இருந்தாலும் அடுத்த தலைமுறை உற்பத்தி மற்றும் புதுமை புகுத்தல்கள் அனைத்தும் இங்குதான் அமெரிக்காவில்தான் நடைபெற வேண்டும். இங்குதான், போற்றுதற்குரிய நமது மண்ணில்தான் நடைபெற வேண்டும்” என்கிறார் ட்ரம்ப் திட்டவட்டமாக.

ட்ரம்ப் ஆட்சியின் முதல் 100 நாட்களுக்கான திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதில் நிலக்கரி, மற்றும் ஷேல் கியாஸ் துறைகளில் வேலை வாய்ப்பைக் குறைக்கும் கட்டுப்பாடுகளை தூக்கி எறிவது, சைபர் – தாக்குதல்களிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாக்க வலுவான திட்டமிடுதல்களைச் செய்வது, அதேபோல் அரசுத்துறை அதிகாரிகள் தாங்கள் பணிக்காலம் முடிந்த பிறகு பிறநாட்டு அரசுகளுக்கான லாபியிஸ்ட்களாக மாறுவதை தடை செய்வது, அதாவது 5 ஆண்டுகள் இவர்களுக்குத் தடை விதிப்பது. பதவியேற்ற முதல்நாளில் இது குறித்து செயல் உத்தரவுகளைப் பிறப்பிக்கப் போவதாக ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.

ட்ரம்பின் இந்த திட்டங்களுக்கு ஜனநாயகக் கட்சியின் பல தரப்பினரும் ஆதரவு அளிக்கப் போவதாக தெரிகிறது. அமெரிக்காவுக்கு வேலைவாய்ப்புகளைக் கொண்டு வரும் நாட்டின் நடுத்தர வர்க்கத்தினருக்கு உதவும் திட்டங்களை பெர்னி சாண்டர்ஸ் ஆதரிக்கிறார். ட்ரான்ஸ் பசிபிக் ஒப்பந்தத்திலிருந்து விலகும் முடிவையும் பெர்னி சாண்டர்ஸ் ஆதரிக்கிறார்.

எச்1பி விசா விவகாரம்

அமெரிக்காவுக்கு ஆண்டொன்றுக்கு 85,000 திறன் வாய்ந்த பணியாளர்களைக் கொண்டு வரும் எச்1பி விசாவைப் பொறுத்தவரை இந்தியப் பணியாளர்களே அதிகம். இதுதான் தற்போது ட்ரம்பின் விசாரணையின் இலக்காகியுள்ளது.

குடியரசுக் கட்சியின் எச்1பி விசாவின் கடும் எதிர்ப்பாளரான செனட் உறுப்பினர் ஜெஃப் செஷன்ஸ் என்பவரே புதிய அட்டர்னி ஜெனரல். அதேபோல் எச்1பி விசாக்களை கடுமையாக எதிர்க்கும் ஜனநாயகக் கட்சியின் நியூயார்க் செனட் உறுப்பினர் சக் ஷூமர் என்பவர் செனட்டில் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பெர்னி சாண்டர்ஸும் எச்1பி விசா எதிர்ப்பாளர்தான்.

எச்1பி விசா எதிர்ப்பாளார்கள் எதிர்ப்புக்குக் காரணம் என்னவெனில், அமெரிக்கப் பணியாளர்களுக்கு மாற்றாக குறைந்த சம்பளத்தில் அயல்நாட்டுப் பணியாளர்களை கொண்டு வருவதற்காக எச்1பி விசாவை தவறாக பயன்படுத்துகின்றனர் செய்கின்றனர் என்பதே. எச்1பி விசா கோரும் நிறுவனங்களுக்கு ஏகப்பட்ட சலுகைகள் உள்ளன. இவை அமெரிக்க தொழிலாளர் துறையின் ஒப்புதலுக்குட்பட்டவையே. தற்போது ட்ரம்ப் ஆட்சியில் இந்த தொழிலாளர் துறைதான் அமெரிக்காவுக்கு பாதகமான எச்1பி விசா குளறுபடிகளை விசாரிக்கவுள்ளது.

அமெரிக்கப் பணியாளர்களுக்குப் பதிலாக குறைந்த சம்பள அயல்நாட்டு பணியாளர்களைக் கொண்டுவருவதை அமெரிக்க நீதிமன்றங்களும் ஆதரித்தே தீர்ப்புகளை வழங்கியுள்ளன. ஆனால் ட்ரம்ப் நிர்வாகத்தில் நீதித்துறை தலைவராக வரவிருக்கும் ஜெஃப் செஷன்ஸ் இந்தப் போக்கை அவ்வளவு சுலபமாக விட்டுவிடப்போவதில்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது. எனவே, ட்ரம்ப் ஆட்சியில் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு சில பல சிக்கல்கள் எழும் என்றே பலரும் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply