2 முறை சென்னை வந்தும் கருணாநிதியை சந்திக்காத ராகுல்காந்தி

2 முறை சென்னை வந்தும் கருணாநிதியை சந்திக்காத ராகுல்காந்தி

rahul gandhiதமிழக முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதா, சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த போதிலும், அவர் மறைந்த பின்னரும் என இருமுறை சென்னை வந்தார் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி. ராஜாஜி ஹாலில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய ராகுல்காந்தி நேராக மெரினாவிற்கு சென்று ஜெயலலிதாவின் உடல் வரும் வரை சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்து ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு முடியும் வரை இருந்துவிட்டு பின்னர் டெல்லி சென்றார்.

ஆனால் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சி தலைவரான திமுக தலைவர் கருணாநிதியை அவர் இரண்டு முறை சென்னை வந்தபோதிலும் சந்திக்கவில்லை. இது திமுகவினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திமுகவின் முன்னணி தலைவர் ஒருவர் கூறியபோது, ‘‘கருணாநிதி இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர். இந்திரா முதல் சோனியா காந்தி வரை எண்ணற்ற தலைவர்களுடன் அரசியல் செய்தவர். நேரு குடும்பத்தின் மீதும், காங்கிரஸ் கட்சியின் மீதும் அக்கறை கொண்டவர். சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் உடனடியாக நலம் விசாரித்து ராகுல் காந்திக்கு கடிதம் அனுப்பினார். ஆனால், 2 முறை சென்னை வந்த ராகுல்காந்தி, உடல்நலமில்லாமல் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை சந்திக்கவில்லை. இதனால் ஸ்டாலின், கனிமொழி மட்டுமல்ல கருணாநிதியும் கடும் அதிருப்தியும், வேதனையும் அடைந்துள்ளார்’ என்று கூறினார்.

ஆனால் இதுகுறித்து டுவிட்டர், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து கூறியுள்ளனர். மரியாதை, அன்பு, ஆகியவை தானாக வரவேண்டிய ஒன்று. என்னை வந்து பார்க்கவில்லை என்று ஒரு முதுபெரும் தலைவர் வருத்தப்படுவது அவரது அறியாமையை வெளிப்படுத்துவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply