சீனாவில் கோடீஸ்வர தொழிலதிபரின் மகன் சொத்துகளை வேண்டாம் எனப் புறக்கணித்தார். இதையடுத்து, அந்தத் தொழிலதிபர் தனது சொத்துக்களை நிர்வகிக்க பொருத்தமான வாரிசை தேடி அலையாய் அலைந்து திரிவது சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாலியன் வான்டா குழுமத்தின் தலைவர் வாங் ஜியான்லின் (62). இவரது குழுமம், வணிக வளாகங்கள், உல்லாச பொழுதுபோக்கு பூங்காக்கள், ஸ்போர்ட்ஸ் கிளப், திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ளது. இவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 6 லட்சம் கோடியாகும்.
வாரிசு அடிப்படையில் சொத்தை நிர்வகிக்க அவரது மகன் வாங் சிகாங் மறுத்துவிட்டார். இதனால், சொத்துகளை கட்டிக் காக்க திறமையான வாரிசை தேடி அலைந்து திரிந்து வருகிறார் அந்த கோடீஸ்வர தந்தை!
இதுகுறித்து வாங் ஜியான்லின் கூறும்போது: வயதாகி விட்டதால் சொத்துகளை நிர்வகிக்கும் பொறுப்பை எனது மகனிடம் ஒப்படைக்க முடிவெடுத்தேன். அனைத்து சொத்துகள் மற்றும் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு ஓய்வெடுக்கும் திட்டம் குறித்து எனது மகனிடம் பேசினேன். ஆனால், எனது தொழில்களையும், சொத்துகளையும் நிர்வாகம் செய்ய அவன் மறுத்துவிட்டான். மேலும், அவனுக்கு என்னைப் போல தொழிலதிபராக ஆசையில்லை என்று உறுதியாக தெரிவித்துவிட்டான். ஒவ்வொரு இளைஞனுக்கும் தனிப்பட்ட கனவு உள்ளது. அதற்கான தேடல்களுக்கு முன்னுரிமை கொடுக்க அவனுக்கு முழு சுதந்திரம் உள்ளது. எனவே, அவன் சுயமாக எடுத்த முடிவில் நான் தலையிட விரும்பவில்லை.
பல லட்சம் கோடி மதிப்புள்ள இந்த சொத்துகளை நிபுணத்துவம் கொண்ட மேலாளர்களின் கையில் ஒப்படைத்துவிட்டு, நிர்வாகத்தை மேற்பார்வையிட மட்டும் முடிவு செய்துள்ளோம். அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளேன் என்றார் அவர்.
வாங் ஜியான்ஸின், இந்தியா வந்திருந்தபோது பிரதமர் மோடியை சந்தித்து ஹரியாணாவில் 1,000 கோடி டாலரை முதலீடு செய்ய உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது வான்டா குழுமம், ஏ.எம்.சி. என்டர்டெய்ன்மென்ட், ஹாய்ட்ஸ் குரூப், ஓடியன், யு.சி.ஐ. சினிமாஸ் ஆகிய நிறுவனங்களை கையகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, 10,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளை நிர்வகித்து வரும் உலகின் மிகப்பெரிய நிறுவனமாக வான்டா திகழ்கிறது. சீனாவில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாரிசுகள், தங்களது கோடீஸ்வர பெற்றோர்களின் சொத்துகளை நிர்வகிக்க ஆர்வம் காட்டாதது ஷாங்காய் ஜியோடங் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.