கத்திச்சண்டை. திரைவிமர்சனம். விஷாலின் மற்றுமொரு அட்டைக்கத்தி
வழக்கமாக சுராஜ் படம் என்றாலே முதல் பத்து நிமிடங்களுக்கு பரபரப்பான ஆக்சன் காட்சிகள் இருக்கும். அதன் பின்னர் இடைவேளைக்கு முந்தைய ஐந்து நிமிடங்கள் வரை காமெடி, காதல் காட்சிகள் கலந்து ஓடும். இடைவேளை டுவிஸ்டுக்கு பின்னர் இரண்டாம் பாதியில் மீண்டும் காதல், காமெடி காட்சிகள் ஓடும். இறுதியில் கிளைமாக்ஸில் கொஞ்சம் கதையுடன் கூடிய ஆக்சன் இருக்கும். இதுதான் சுராஜ் பார்முலாம். இதைத்தான் அவர் படிக்காதவன், அலெக்ஸ்பாண்டியன் உள்பட பல படங்களில் செய்துள்ளார். அந்த வரிசையில் வந்துள்ள இன்னொரு படம் ‘கத்திச்சண்டை’
சென்னைக்கு வரும் விஷால், உயர் போலீஸ் அதிகாரி ஜெகபதி பாபுவின் தங்கை தமன்னாவை காதலிக்கின்றார். இந்த காதலுக்கு லோக்கல் ரவுடி சூரி உதவுகிறார். விஷாலுக்கு ஒருசில டெஸ்ட்டுக்கள் வைக்கும் ஜெகபதிபாபு, அதன்பின்னர் விஷாலுக்கு தமன்னாவை திருமணம் செய்ய ஒப்புக்கொள்கிறார். ஆனால் விஷாலின் உண்மையான நோக்கம் தமன்னாவின் காதல் இல்லை என்றும், குற்றவாளி ஒருவர் பதுக்கு வைத்திருக்கும் கோடிக்கணக்கான பணத்தை சுருட்டவே விஷால் சென்னைக்கு வந்துள்ளார் என்பதையும் ஜெகபதிபாபு கண்டுபிடிக்கின்றார். இதன் பின்னர் அந்த பணத்தை விஷால் கைப்பற்றினாரா? ஜெகபதிபாபு என்ன ஆக்சன் எடுத்தார், விஷால்-தமன்னா காதல் என்ன ஆயிற்று? என்பதுதான் மீதிக்கதை
விஷால் வழக்கம்போல தமன்னாவை காதலிக்கின்றார், சூரி, வடிவேலுவுடன் இணைந்து காதல் செய்கிறார், அவ்வப்போது சண்டை போடுகிறார். இதில் சண்டைக்காட்சியில் மட்டுமே பாஸ் செய்கிறார்.
‘பாகுபலி’யில் அபாரமாக நடித்த தமன்னாவை இதில் வெறும் கவர்ச்சிக்கும் பாடலுக்கும் மட்டும் பயன்படுத்தி உள்ளார்கள். சுராஜிடம் இதைவிட அதிகம் எதிர்பார்ப்பது நமது தவறுதான்
மாறி மாறி வரும் சூரி, வடிவேலு காமெடியில் வடிவேலு காமெடி மட்டும் தேறுகின்றது. இவ்வளவு திறமையான ஒரு நடிகரை ஐந்து வருடங்கள் முடக்கி வைத்திருந்தது அவருக்கு எந்தவித நஷ்டமும் அல்ல, நமக்குத்தான் பெரும் நஷ்டம். மனிதர் பின்னி எடுக்கின்றார். ஹிப்ஹாப் தமிழாவின் பாடலும் பின்னணி இசையும் ஓகே. சண்டைக்காட்சிகளில் கேமிராமேன் ரிச்சர்ட் எம்.நாதனின் உழைப்பு தெரிகிறது. குறிப்பாக சேஸிங் காட்சிகள் அபாரம்.
நம்ப முடியாத சண்டைக்காட்சிகள், கதைக்கு சம்பந்தம் இல்லாத காமெடி காட்சிகள், மொத்தமே பத்து அல்லது இருபது நிமிடங்களுக்கான கதை என்று வழக்கமான பார்முலாவுடன் விஷாலுடன் கைகோர்த்து களத்தில் இறங்கியுள்ளார் சுராஜ். இந்த பார்முலா மீண்டும் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.