ஒபாமாவுக்கு பதிலடி கொடுத்தார் புதின். 35 அமெரிக்க தூதர்கள் வெளியேற்றம்
சமீபத்தில் நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய ஹேக்கர்களின் தலையீடு காரணமாகத்தான் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார் என்று உறுதியாக நம்பிய அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று அதிரடியாக அமெரிக்காவில் உள்ள ரஷ்ய தூதர்கள் 35 பேர்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவால் அமெரிக்க, ரஷ்ய உறவு பாதிப்பு அடையும் அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில் ஒபாமாவின் அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவில் உள்ள 35 அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்ற ரஷ்யா திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்கெய் லாவ்ரோவ் கூறுகையில், ‘அமெரிக்க தூதரக அதிகாரிகள் 35 பேரை வெளியேற்றுவதற்காக அதிபர் விளாடிமிர் புதினுக்கு பரிந்துரை செய்திருக்கிறேன். அதன்படி மாஸ்கோவில் உள்ள தூதரகத்தில் இருந்து 31 அதிகாரிகளும், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் துணை தூதரகத்தில் இருந்து 4 பேரும் நீக்கப்படுவார்கள்’ என்று கூறினார்.
இதற்கு முன்னர் ஜார்ஜ் புஷ் ஆட்சிக் காலத்தின் போது 51 ரஷ்ய தூதர்கள் வெளியேற்றப்பட்டனர். அதற்கு பதிலடியாக 50 அமெரிக்க தூதர்களை ரஷ்யா வெளியேறும்படி உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.