அரசு கூர்நோக்கு இல்லங்களில் ஆற்றுப்படுத்துநர் பணி வாய்ப்பு
அரசு கூர்நோக்கு இல்லங்களில் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களுக்கு ஜனவரி 6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் சென்னை, கடலூர், திருச்சி, சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் இயங்கும் அரசு கூர்நோக்கு இல்லங்கள், சென்னை மற்றும் செங்கல்பட்டில் இயங்கும் அரசு சிறப்பு இல்லங்களில் தங்கியிருக்கும் சிறுவர்களுக்கு ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்களை உரிய சான்றிதழ் நகல்களுடன், நன்னடத்தை அலுவலர், அரசினர் கூர்நோக்கு இல்ல வளாகம், மேலப்பாளையம், திருநெல்வேலி என்ற முகவரிக்கு ஜனவரி 6 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் ஆற்றுப்படுத்துநர்களுக்கு வருகையின் அடிப்படையில் (ஓராண்டில் 60 நாள்களுக்கு மிகாமல் அல்லது வாரம் ஒரு முறை) மதிப்பூதிய அடிப்படையில் ஒரு வருகைக்கு போக்குவரத்து செலவு உள்பட ரூ.1000 வழங்கப்படும். இதுகுறித்த விவரங்களுக்கு மாவட்ட நன்னடத்தை அலுவலரைத் தொடர்புகொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.