பெரியார் பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு
பெரியார் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகளை ஞாயிற்றுக்கிழமை மாலை துணைவேந்தர் சி.சுவாமிநாதன் வெளியிட்டார்.
பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் நவம்பர் மாதம் நடத்தப்பட்ட இளநிலைப் பாடங்களுக்கான பருவத் தேர்வு முடிவுகள் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேர்வாணையர் எஸ்.லீலா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணைவேந்தர் சி.சுவாமிநாதன், தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மேலும், மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளை குறுந்தகவலாக அனுப்பும் சேவையையும் அவர் தொடக்கி வைத்தார். பின்னர் அவர் கூறியது:
மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.periyaruniversity.ac.in என்ற இணையதளம் மற்றும் தாங்கள் பயிலும் கல்லூரிகளிலும் தெரிந்து கொள்ளலாம். குறுந்தகவல் மூலமும் அனைவருக்கும் தேர்வு முடிவு அனுப்பப்படவுள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியான 10 தினங்களுக்குள் மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் செய்ய விரும்பும் மாணவர்கள், கல்லூரி முதல்வர் வாயிலாக விடைத்தாள் நகல் பெறாமலேயே நேரடியாக மறுமதிப்பீட்டுக்கு ரூ.250 மற்றும் மறுகூட்டலுக்கு ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும், விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவர்கள் அதற்குரிய கட்டணமாக ரூ.250 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் ஜனவரி 9-ந்தேதி வெளியிடப்பட உள்ளது. மதிப்பெண் சான்றிதழை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில், ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெ.செந்தில்வேல்முருகன், துணைப் பதிவாளர் பி.கே.செந்தில்குமார், பேராசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.