செவித்திறனை பாதிக்கும் நோய்கள்
காது கேட்பது பாதிக்கப்படுவது அல்லது செவித்திறன் குறைவதற்கு நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்பை காரணமாகும். இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
செவித்திறனை பாதிக்கும் நோய்கள்
உடலின் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்று காது. ஒலியை கேட்கும் திறன் இவ்வுறுப்புக்கு உள்ளது. காது கேட்பது பாதிக்கப்படுவது அல்லது செவித்திறன் குறைவதற்கு நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்பை காரணமாகும்.
ஆங்கிலத்தில் இதனை சென்சோநியூரல் டெப்னஸ் என்று கூறுவார்கள். இப்பாதிப்பு உள்ளவர்களுக்கு சில சத்தங்கள் மிகுந்த ஒலியுடன் கேட்கும். இரண்டு அல்லது 3 பேர் சேர்ந்து பேசும்போது, அதனை புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படும். மேலும் அதிக சத்தம் கேட்கும் இடங்களில் இருந்தால் செவித்திறன் குறையும். கேட்பதிலும் சிரமம் ஏற்படும். இன்னும் சொல்லப் போனால் டெலிபோன் மணி அடித்தால் கூட அதனை கேட்க முடியாத நிலை ஏற்படும்.
அதோடு இவர்களுக்கு தள்ளாட்டம், தலை சுற்றல் போன்றவையும் வரலாம். காதுக்குள் வண்டு சத்தம் போடுவது போலவோ அல்லது மணி அடிப்பது போன்றோ சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.
இது போல செவித்திறன் குறைந்து வாந்தி ஏற்பட்டு மயக்கத்தை உண்டாக்குகிற நோயும் உள்ளது. நமது உள் காதில் மிகவும் நுண்ணிய முடியை போன்ற திசுக்கள் உள்ளது. இவை ஓசையை மின்காந்த அலைகளாக மாற்றி மூளைக்கு செலுத்துகின்றன. இந்த திசுக்கள் பாதிக்கப்படும்போதோ அல்லது நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்போதோ செவித்திறன் குறைகிறது.
செவித்திறன் பாதிப்பு சிலருக்கு பிறவியிலேயே ஏற்படுகிறது. மேலும் ஒரு பெண்ணுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் அம்மை, அக்கி போன்ற நோய்கள் சில நேரம் காதை செவிடாக்கி விடலாம். சிலருக்கு வயதாகும் போது செவித்திறன் குறையும். ரத்த நாள நோய்களாலும் சிலருக்கு காது கேட்காமல் போகும்.
சத்தமான ஒலிகளை தொடர்ந்து கேட்டு கொண்டே இருத்தல், ஒரு சில மருந்துகளை தொடர்ந்து உட்கொள்வது, அதிக ஒலி கேட்கும் இடத்தில் வேலை பார்ப்பது போன்றவையும் காது கேட்காமல் போவதற்கான காரணங்களாகும். இப்போது செவித்திறனை அதிகரிக்க மிஷின்களும், காக்ளர் இம்பிளான்ட் போன்ற அறுவை சிகிச்சைகளும் வந்து விட்டன.
ஆயுர் வேதத்தின்படி காது, ஆகாச பூதத்தின் இருப்பிடமாகும். அங்கு வாத, பித்த, கபங்களில் வாயுவின் சஞ்சாரம் இருக்கிறது. இந்த வெற்றிடத்தில் இருந்தே சத்தம் உருவாகிறது. வாதத்தின் வறட்சியாலும், குளிர்ச்சியாலும் ஒருவருக்கு வாத காலத்தில் செவித்திறன் குறைகிறது. எனவே வாதத்தை தணிக்கும் மருந்துகள் காது வலிக்கு குணமளிக்கும்.
ஆயுர்வேத மருந்துகள் :
பால் முதப்பன் கிழங்கால் காய்ச்சப்பட்ட பால் கஷாயம், அதில் கக்ஷிரபலா 101 ஆவர்த்தி சேர்த்து சாப்பிடலாம். அஸ்வகந்தா லேகியத்தை காலை மற்றும் இரவு நேரத்தில் பாலுடன் சேர்த்து அருந்தலாம். சிறு தேக்கால் காய்ச்சப்பட்ட நெய் இரவில் தூங்குவதற்கு முன் சாப்பிடலாம். தலைக்கு பலா அஸ்வகந்தா லாக்ஷாதி தைலம் தேய்த்து குளித்து வரலாம்.
காதில் ஓட்டை இல்லை என்றாலும் சீழ் இல்லை என்றாலும் வசா லசூனாதி தைலம் என்ற வசம்பு பூண்டால் காய்ச்சப்பட்ட தைலமும் ஏரண்ட சிக்ருவாதி தைலம் என்கிற ஆமணக்கு, முருங்கை யால் காய்ச்சப்பட்ட எண்ணையும் ஒன்றிரண்டு துளிவிட வேண்டும். சுமார் 3 நிமிடங்கள் வைத்திருந்து பஞ்சால் துடைத்து எடுக்க வேண்டும்.
நவீன மருத்துவம் இதை ஏற்றுக் கொள்வதில்லை. ஆயுர் வேதத்தில் இதைச் செய்து வருகிறோம். குளிக்கும் போது பாதத்திலும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இதை பாத அப்யங்கம் என்று சொல்வார்கள். உளுந்து பதார்த் தங்களை எண்ணெய் பதார்த்தங்கள் மற்றும் தயிர் போன்ற உணவு வகைகளை அதிகம் சாப்பிடக் கூடாது.
சிலருக்குப் பிறவியிலேயே காது கேட்காது. காதில் சீழ் வரும். வலி வரும். திடீரென்று அல்லது கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்காமலேயே போய் விடும். சிறு வயதில் காதில் கிருமித் தொற்று ஏற்பட்டு அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால், நாளடைவில் அது சீழாக மாறும். காதின் அடியில் உள்ள வர்மத்தில் அடிப்பட்டாலும் அது சீழாக மாறலாம். ஜலதோஷம் வந்து சிகிச்சை செய்யாமல் விட்டாலும் காது பாதிக்கப் படலாம்.
சிலருக்குக் காதில் எலும்பு அரிப்பு நோய் வரலாம். இது மூளைக்குக் கூடப் பரவலாம். சொந்தத்தில் திருமணம் முடித்தாலோ, மரபணு காரணமாகவோ பிறவிக் காது கேளாமை ஏற்படலாம். கர்ப்பக் காலத்தில் ஒரு சில மருந்து களைச் சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் பிறக்கும் குழந்தைக்கு காது கேட்காமல் போக வாய்ப்பு உண்டு.
பிறந்தவு டன் குழந்தை அழாமல் இருந்தால் உடனே சிகிச்சை அளிக்க வேண்டும். காதுக்கும், பேச்சுக்கும் சம்பந்தம் உண்டு. காது நன்றாக இருந்தால் தான் பேச முடியும். இப்போது நவீன மருத்துவத்தில் காக்ளர் இம் பிளான்ட் வந்துள்ளது. காதில் மெழுகு சேர்ந்து இருந்தாலும், தண்ணீர் புகுந்து இருந்தாலும் அதைச் சுத்தம் செய்யலாம். நோயாளிகள் அதிகச் சத்தத்தைக் கேட்கக் கூடாது. வாக்மேன் பயன்படுத்தக் கூடாது. செல்போனை அதிகமாகப் பயன்படுத்தக்கூடாது. ஜலதோஷத்தை அலட்சியப்படுத்தக் கூடாது. காதில் குச்சி, பேனா போன்றவற்றைப் பயன்படுத்தி குடையக் கூடாது.
எளிய கைமருந்து :
வெங்காயசாறு காது வலிக்குச் சிறந்த மருந்து. அதை எண்ணெயில் காய்ச்சிப் பயன்படுத்தலாம். கடுகை அரைத்து காதின் பின்புறத்தில் போட்டால் காதுவலியும், பழுப்பு வருவதும் குறையும், கரிசலாங்கண்ணி, நெல்லிக்காய், தேவதாரம், அதிமதுரம், கஸ்தூரி மஞ்சள், அமுக்கரா பால், நல்லெண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து எண்ணெய் காய்ச்சி தேய்த்துவர காதுகளுக்கும் புலன்களுக்கும் நல்ல பலன் கிடைக்கும்.
கருஞ்சீரகப் பொடியை வெற்றிலைச் சாற்றில் அரைத்துக் காதைச் சுற்றிப் போட வலி, வீக்கம் குறையும். காதில் ஏற்படும் சத்தத்தையும் குறைக்கும்.
சுக்குப்பால் கஷாயம் குடித்தாலும் காதில் ஏற்படும் சத்தம் குறையும்.
பூண்டைத் தோல் நீக்கித் தலைப்ப குதியை அகற்றி விட்டு காதில் வைத்தால் காது வலிகுறையும்.