இருக்கையைத் தேர்ந்தெடுக்கும் ரகசியங்கள்

இருக்கையைத் தேர்ந்தெடுக்கும் ரகசியங்கள்

இருக்கையை வாங்கும்போது முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் கை வைக்கும் பகுதி. இந்தக் கைவைக்கும் பகுதிதான் (Arm) இருக்கையின் வடிவமைப்பையும் வசதியையும் தீர்மானிக்கிறது. இந்த இருக்கைகளின் கைவைக்கும் பகுதி பல வடிவங்களிலும் வித்தியாசமான உயரங்களிலும் கிடைக்கிறது. இவற்றில் சரியான வடிவத்தையும், உயரத்தையும் எப்படித் தேர்ந்தெடுக்கலாம் என்பதற்கான வழிகள்…

இருக்கையின் பயன்பாடுகள்

எந்த மாதிரியான கை வைக்கும் பகுதிகொண்ட இருக்கையை வாங்கலாம் என்பதை முடிவுசெய்வதற்கு முன்னர் இருக்கையை எப்படிப் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதைத் தீர்மானியுங்கள். நீங்கள் இருக்கையைப் படுத்துக்கொள்வதற்கும் பயன்படுத்த விரும்பினால் உயரமான கை வைக்கும் பகுதி இருக்கும் இருக்கையை வாங்குவது நல்லது. இந்த உயரமான கை வைக்கும் பகுதி சாய்ந்துகொள்வதற்கும், படுத்துக்கொள்வதற்கு வசதியாக இருக்கும்.

கை வைக்கும் பகுதியின் உயரம்

நாம் கை வைக்கும் பகுதியின் உயரத்தைப் பற்றிப் பேசும்போது இருக்கையின் உட்புறம் இருக்கும் கை வைக்கும் பகுதியின் உயரத்தைத்தான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பகுதி எவ்வளவு உயரமாக இருக்கிறதோ அவ்வளவு வசதியை இருக்கையில் உட்காரும்போது நாம் உணர்வோம்.

ஆறு அங்குலம் அல்லது அதற்கும் குறைவான கை வைக்கும் பகுதி உயரம் இருக்கும் இருக்கையை உட்கார்வதற்கு மட்டும் பயன்படுத்துவது நல்லது. அலுவலகம் போன்ற இடங்களில் இந்த வகையான இருக்கைகளைப் பயன்படுத்தலாம். ஒருவேளை, உங்களுக்குப் பிடித்திருக்கும் இருக்கையின் கை வைக்கும் பகுதி உயரம் குறைவாக இருந்தால் கவலைப்படத் தேவையில்லை. பன்னிரண்டு அங்குலத்தில் இருக்கும் ஒரு குஷனை இருக்கையின் கை வைக்கும் பகுதி ஓரத்தில் வைத்து இந்த உயரக் குறைபாட்டைச் சரிசெய்துகொள்ளலாம்.

ஒரு நடுத்தரமான இருக்கையின் கை வைக்கும் பகுதி உயரம் என்பது ஏழு அங்குலத்தில் இருந்து 9 அங்குலமாக இருக்கலாம். இது கை வைக்கும் பகுதியில் சாய்ந்து அமர்ந்துகொள்வதற்கும், படுத்துக்கொள்வதற்கும் ஏற்ற உயரமாகக் கருதப்படுகிறது. இப்படி இரண்டுவிதமாக இருக்கையைப் பயன்படுத்த நினைப்பவர்கள் உருண்டையான கை வைக்கும் பகுதிகொண்ட இருக்கையை வாங்கலாம்.

இருக்கையின் உட்புற கை வைக்கும் பகுதி உயரமானது ஒன்பது அங்குலம் அல்லது அதற்கு அதிகமாக இருப்பதுபோதுதான் சாய்வதற்கு வசதியாக இருக்கும். இருக்கையில் நேராக அமர்வதற்கு இந்தக் கை வைக்கும் பகுதி உயரம் பொருத்தமானதாக இருக்கும்.

கை வைக்கும் பகுதி உயரமும் அறையின் வடிவமைப்பும்

வசதிக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து இருக்கையை வாங்குவது சரியானதாக இருக்காது. அறையின் வடிவமைப்பையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். உயரம் குறைந்த கை வைக்கும் பகுதி இருக்கைகள் சிறிய அறைக்கு ஏற்றதாக இருக்கும். உயரமான கை வைக்கும் பகுதிகொண்ட இருக்கைகள் உயரமான கூரைகளைக் கொண்ட பெரிய அறைகளுக்கு ஏற்றவை. உயரமான கை வைக்கும் பகுதி இருக்கைகள் அறைக்குப் பிரம்மாண்ட தோற்றத்தைக் கொடுக்கவும் உதவும்.

எதைத் தேர்ந்தெடுக்கலாம்?

உயரம் மட்டுமல்லாமல் இருக்கையின் கை வைக்கும் பகுதியின் வடிவமைப்பும் முக்கியமானது. இந்த கை வைக்கும் பகுதிகளில் மூன்று வகைகளில் இருக்கின்றன. இவற்றை ‘இங்கிலிஷ் ரோல் ஆர்ம்’ (English roll arm), ‘ரோல்டு ஆர்ம்’ (rolled arm) , ‘டிராக் ஆர்ம்’ (track arm) என்று அழைக்கிறார்கள்.

‘இங்கிலிஷ் ரோல் ஆர்ம்’

இந்த வகை இருக்கையின் கை வைக்கும் பகுதி குறைவான உயரம் கொண்டது. அதனால் இந்த இருக்கையைச் சாதாரணமாக வீடுகளில் பயன்படுத்துவது வசதியாக இருக்காது. ஆனால், விருந்தினர் விடுதி, ‘பீச் ஹவுஸ்’ போன்ற இடங்களுக்கு இந்த இருக்கை ஏற்றதாக இருக்கும்.

‘ரோல்டு ஆர்ம்’

இந்த ‘ரோல்டு ஆர்ம்’ இருக்கையானது சாய்ந்துகொள்வதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் உருண்டையான வடிவமைப்பு படுத்து உறங்குவதற்கும் ஏற்றதாக இருக்கிறது. வசதியான இருக்கையை விரும்புபவர்கள் இதைத் தேர்ந்தெடுக்கலாம்.

‘டிராக் ஆர்ம்’

இந்த வகை கை வைக்கும் பகுதி கொண்ட இருக்கைகள் நவீன அறை, பாரம்பரியமான அறை என இரண்டுக்கும் ஏற்றதாக இருக்கும். ஓர் அறைக்கு உடனடியாக நவீன தோற்றத்தைக் கொடுக்க விரும்புபவர்கள் இந்த ‘டிரக் ஆர்ம்’ இருக்கையைத் தேர்ந்தெடுக்கலாம்.

Leave a Reply