மெரினா கடற்கரை போராட்டம் நடத்துவதற்கான இடம் அல்ல. சென்னை ஐகோர்ட்
சென்னை மெரினா கடற்கரை போராட்டம் நடத்துவதற்கான இடம் அல்ல என்று கூறிய சென்னை ஐகோர்ட் அதே சமயம் இந்த பிரச்சனையில் ஐகோர்ட் தலையிடாது என்று கூறியுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் கடந்த மூன்று நாட்களாக இளைஞர்கள் போராடி வரும் நிலையில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு ஒரு விஷயத்தை கொண்டு வந்தார். சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு கோரி நடைபெற்றுவரும் போராட்டம் அறவழியில் அமைதியான முறையில் நடைபெற்று வருவதாகவும், இருந்தும் போராட்டக்காரர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் கடற்கரை பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தரவில்லை என்றும் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கூறினார்.
ஆனால் இதற்கு பதிலளித்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் ‘ தற்போதைய சூழலில் ஜல்லிக்கட்டுப் பிரச்சினையில் நாங்கள் தலையிட முடியாது. ஜல்லிக்கட்டு குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. இந்த சூழலில் சென்னை ஐகோர்ட்டோ, அல்லது மாநில அரசோ எதுவும் செய்வதற்கில்லை. மேலும், மெரினா கடற்கரை போராட்டம் நடத்துவதற்கான இடமும் அல்ல. இத்தகைய சூழலில் ஜல்லிக்கட்டுப் பிரச்சினையில் தலையிட இந்த நீதிமன்றம் விரும்பவில்லை” என்று கூறினர்.