ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுக்கும் டெக்ஸாஸ் பல்கலை மாணவர்கள்
ஜல்லிக்கட்ட நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறிய அளவில் சென்னை மெரீனாவில் ஆரம்பித்த போராட்டம் இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த போராட்டம் தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவை மட்டுமின்றி தற்போது உலக அளவிலும் பிரபலம் அடைந்துள்ளது.
ஏற்கனவே சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய பகுதிகளில் வாழும் தமிழர்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ள நிலையில் தற்போது அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் தமிழ் மாணவர்கள் அங்குள்ள ‘Spirit Rock’ல் நேற்று ‘We want ஜல்லிக்கட்டு’ என வரைந்து, ஜல்லிக்கட்டுக்காக போராடி வருகின்றனர்.
இந்த பல்கலையில் படிக்கும் மாணவர்கள் தங்களுடைய கருத்தை, படமாக வரைந்து ஊருக்குச் சொல்ல ‘ஸ்பிரிட் ராக்’ எனும் பாறைகளை பயன்படுத்துகிறார்கள். இந்தப் பாறைகளில் எது வேண்டுமானாலும் வரைய, அப்பல்கலைக்கழக மாணவர்களுக்கு உரிமை உண்டு.
நேற்று முதலில் நான்கைந்து தமிழ் மாணவர்கள் இணைந்து ஜல்லிக்கட்டுக்காக வரைய, சில நிமிடங்களில் சுமார் 15 பேர் கூடிவிட்டனராம். ஜல்லிக்கட்டு தொடர்பாக பிரின்ட் – அவுட்டுகள் எடுத்து விநியோகித்திருக்கிறார்கள். இன்று சுமார் நூறு மாணவர்கள் அப்பல்கலைக்கழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக கூடிப் போராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.