வன்முறைக்கு காரணம் ஸ்டாலின் தான். என்னிடம் ஆதாரம் இருக்கிறது. நடராஜன்
மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு காரணம் யார்? அல்லது எந்த அமைப்பு என போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வன்முறைக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டானின் தான் காரணம் என அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் கூறியுள்ளார்.
நேற்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த நடராஜன் இதுகுறித்து கூறியதாவது:
மாணவர்கள் போராட்டத்தில் எந்த அரசியல் கட்சியையும் அனுமதிக்கவில்லை. ‘நாங்கள் நடக்கும் போராட்டத்தில் யாரையும் அனுமதிக்கவில்லை. இது எங்களுடைய போராட்டம். உங்கள் ஆதரவை வெளியில் இருந்து தெரிவியுங்கள். உள்ளே வராதீர்கள்’ என போராட்ட களத்துக்கு வந்த ஸ்டாலினை மாணவர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.
இதையடுத்து ஸ்டாலின் என்ன செய்திருக்க வேண்டும்? மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு, தனது ஆதரவையும் தெரிவித்து விட்டு வந்திருக்க வேண்டும். ஆனால் ‘நாமும் போராட்டத்தில் பங்கேற்றோம். நமக்கும் இதில் உரிமை வேண்டும்’ என்ற நோக்கில் ரயில் மறியலில் ஈடுபட்டார்கள்.
மாணவர்கள் யாருக்கும் தொந்தரவு செய்யவில்லை. யாருக்கும் தொல்லை கொடுக்காமல் அமைதியான அறப்போராட்டத்தை ஒழுக்கமாக ஒற்றுமையாக செய்து வந்தார்கள். இதில் அரசியல் புகுத்த நினைத்த ஸ்டாலின் செய்த தவறு தான் இவ்வளவு வன்முறைக்கும் வித்திட்டது. மறுநாள் மக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் ஸ்டாலின் ஏன் ரயிலை மறிக்க வேண்டும். மாணவர்கள் போராட்டம் என்பது அவர்கள் உரிமை. அதில் தன் பங்களிப்பு இருப்பது போல் ஸ்டாலின் ஏன் பாசாங்கு காட்ட வேண்டும்? இது தான் கேள்வி.
மறுநாள் உண்ணாவிரதம் நடத்துகிறார்கள். அது கேலிக்கூத்து. அவர்களுடைய நோக்கம் ‘போராட்டத்தில் எப்படியாவது ஒரு கலவரத்தை ஏற்படுத்தி விட வேண்டும். அதன்மூலம் அரசுக்கு கெட்டபெயர் ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் நாம் குளிர் காய வேண்டும்’ என்பது தான். ஜல்லிக்கட்டை கொண்டு வர வேண்டும் என்ற அக்கறை அவர்களுக்கு துளியும் கிடையாது.
மாணவர்களை தூண்டி அவர்களுக்கு அவப்பெயர் உருவாக்கும் வகையில் தி.மு.க. இயங்கியது. சில விஷமிகளை தி.மு.க. உள்ளே அனுப்பியது. அதற்கான அத்தனை ஆதாரங்களும் இருக்கிறது. ஸ்டாலின், கலைஞரோடு இருந்தவர்கள் போராட்டத்தில் இருந்தார்கள்.
நடந்த வன்முறை சம்பவத்துக்கு இவர்கள் அடிப்படை. அதற்காக மாணவர்கள், பொதுமக்கள் என சம்பந்தமில்லாதவர்கள் இதில் தாக்கப்பட்டிருந்தால் அதை நான் கண்டிக்கிறேன். அதற்கு காரணமான அதிகாரிகள், போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்குதல் நடத்தியவர்கள் ஆயுதப்படை போலீஸார். அவர்களுக்கு யாரையும் தெரியாது. அரசுக்கு மாணவர்களை தாக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது.
எல்லோரும் போராட்டத்தில்ல் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் ஊடுருவியதாக சொல்கிறார்கள். தி.மு.க.வும், சில அமைப்புகளும் தான் இதற்கு காரணம். போலீஸ்காரர்களாக இருந்தாலும், வன்முறையை தூண்டியவர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டு நம் கலாச்சாரம், அதை மீட்க போராடிய மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு நடராஜன் தெரிவித்தார்.