ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் குழு அமைப்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக அதிமுக உடைந்தது. சசிகலா அணியின் சார்பில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார். இந்த நிலையில் சசிகலா குடும்பத்தினர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்ததால் கட்சியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு சசிகலா, தினகரன் உள்பட சசிகலா குடும்பத்தினர்களை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க மூத்த அமைச்சர்கள் முடிவு செய்தனர். இதனையடுத்து ஓபிஎஸ் அணியையும் கட்சியில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இரு அணிகளும் பேச்சுவார்த்தைக்கு ஒரு குழு அமைத்து பேச முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த வைத்திலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவுடன் ஓபிஎஸ் அணியின் குழு பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான சூழல் வந்தவுடன் இரு அணிகளும் இணைந்து ஒன்றிணைந்த அதிமுகவாக செயல்படும் என்று கூறப்படுகிறது.