அதிமுக, திமுகவுக்கு மாற்றாக மேலும் ஒரு கூட்டணி உதயம்.
ஏற்கனவே தமிழகத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, மக்கள் நலக்கூட்டணி, பாமக, நாம் தமிழர், என ஐந்து கூட்டணிகள் இருக்கும் நிலையில் தற்போது நடிகர் கார்த்திக் ஒரு தனிக்கூட்டணியை அமைத்துள்ளார். இதற்கு விடியல் கூட்டணி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதிமுக மற்றும் திமுகவுக்கு மாற்று நாங்கள்தான் என வழக்கம்போல் மற்ற கூட்டணி போல இந்த கூட்டணியும் கூறியுள்ளது.
ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு மாதம் இருக்கும் நிலையில் திடீர் அரசியல்வாதியாக மாறி தேர்தல் முடிந்தவுடன் காணாமல் போகும் ஒரு கட்சியின் தலைவர்தான் நடிகர் கார்த்திக். இந்நிலையில் இவருடைய தலைமையில் விடியல் கூட்டணி என்ற பெயரில் மேலும் ஒரு அணி தமிழகத்தில் உருவாகியுள்ளது. சென்னையில் இந்த கூட்டணியை நேற்று அறிமுகம் செய்து வைத்து கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது:
எங்கள் அணி வட்டமேசை அணி. இதில் அனைவருக்கும் சம உரிமையும், சமத்துவமும் உள்ளது. நாங்கள் ஊழலற்ற, சமத்துவம் நிறைந்த ஆட்சியை கொண்டு வருவதற்காக விடியல் கூட்டணியை உருவாக்கியுள்ளோம்.
எங்கள் அணியில் நாடாளும் மக்கள் கட்சி, லோக் ஜனசக்தி, மக்கள் மாநாட்டு கட்சி, தமிழக மக்கள் கட்சி, தலித் சேனா மற்றும் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் ஆகிய 6 கட்சிகள் இனைந்துள்ளன. இன்னும் சில கட்சிகளுடன் பேசி வருகிறோம். இரண்டொரு நாளில் இந்த அணியின் செயல் திட்டம் மற்றும் கொள்கை முடிவுகளை செய்தியாளர்களிடம் அறிவிப்போம்.
தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும், புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் எங்கள் விடியல் கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து கலந்து ஆலோசனை செய்து அறிவிப்போம்.
திமுக, அதிமுக அல்லாத மாற்று கட்சிகளை தேடிய தமிழக மக்களுக்கு உண்மையான புதிய மாற்று எங்கள் அணிதான். அந்த கட்சியினருடன் நாங்கள் கூட்டணி வைக்க விரும்பியது அவர்களை திருத்துவதற்காகத்தான். அந்த நம்பிக்கை பொய்த்துப்போனதால் விடியல் கூட்டணியை தொடங்கியுள்ளோம் என்று கூறியுள்ளார். இந்த கூட்டணிக்கு நடிகர் கார்த்திக்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறினார்.