நடிகை மைத்ரி புகாரின் பேரில் மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா மகன் கார்த்திக் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் பெங்களுரு நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் மீது கன்னட நடிகை மைத்திரி, தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக கார்த்திக்கின் நிச்சயதார்த்தம் தினத்தன்றுகாவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், ஏற்கனவே ஜூன் 5 ஆம் தேதி மங்களூருவில் உள்ள கார்த்திக் கவுடாவின் வீட்டில் அவர் என்னை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், தன்னுடைய திருமணத்தை மறைத்துவிட்டு கார்த்திக் கவுடாவுக்கு தற்போது வேறு ஒரு பெண்ணுடன் சட்டவிரோதமாக திருமண நிச்சயம் செய்யப்பட்டுள்ளது என்று நடிகை மைத்திரி கூறியிருந்தார். அவருடைய புகாரை ஏற்றுக்கொண்ட ஆர்.டி. நகர் காவல் நிலைய போலீஸ் அதிகாரிகள் கார்த்திக் மீது பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றை பதிவு செய்தனர்.
இதனால் காவல்துறையினர்களின் கைது நடவடிக்கையில் இருந்து தன்னை விடுவித்துகொள்ள பெங்களூரு நீதிமன்றத்தில் கார்த்திக் கவுடா முன்ஜாமீன் கோரி இருந்தார். இந்நிலையில், பாலியல் புகாரில் சிக்கியுள்ள ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடாவிற்கு பெங்களூரு நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது.