அமெரிக்கா நாட்டை சேர்ந்த ‘‘நியூ இங்கிலாந்து பிரிவிங் கம்பெனி’’ என்ற மதுபான தயாரிப்பு நிறுவனம் காந்தி பெயரில் புதுவகை பீர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த பீர் டின்னில் மகாத்மா காந்தி படம் இடம் பெற்றுள்ளது. இந்த பீர் வகைக்கு பல நாடுகளில் இருந்து பெரும் வரவேற்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மதுவை எதிர்த்து போராடிய காந்தியின் பெயரிலேயே மதுபானம் தயாரித்து விற்பனை செய்து வரும் நிறுவனத்தை கண்டித்து உலகம் முழுவதிலும் இருந்து எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது. புதுவகை பீர் டின்னில் காந்தி படம் பயன்படுத்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு டின் பீர் விளம்பரத்தில் உள்ள காந்தி படத்தை அகற்ற வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் நம்பள்ளி நீதிமன்றத்தில் இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. வக்கீல் ஜனார்த்தன கவுடா என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அவர் தன் மனுவில், இந்தியாவில் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்க மது நிறுவனம் இத்தகைய செயல்களில் ஈடுபட்டுள்ளது. அவர்களது செயல் கண்டனத்துக்குரியது. பீர் டின்னில் மகாத்மா காந்தி படத்தை அச்சிட்டதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும். தேச கவுரவச் சட்டம் 1971 பிரிவு 124 (ஏ)யின்படி அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். மகாத்மா காந்தியை இழிவுபடுத்தி இருப்பதை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள இயலாது.
இவ்வாறு அவர் தன் மனுவில் கூறியுள்ளார்