இனிமேல் பாராளுமன்றத்தில் கூச்சல் போட்டால் சம்பளம் கிடையாது. எம்பிக்களுக்கு கிடுக்கிப்பிடி?
நாடாளுமன்றம் எப்போது கூடினாலும் எதிர்க்கட்சிகள் எதாவது ஒரு காரணத்தை கூறி கூச்சல் குழப்பம் ஏற்படுத்தி நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைப்பதே வழக்கமாக உள்ளது. இதனால் பலகோடி வீண் செலவு என்பது மட்டுமின்றி மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாரதிய ஜனதா மூத்த தலைவர் சாந்தகுமார் சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு ஒரு ஆலோசனையை கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அவர் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பாராளுமன்றத்தில் விதிமுறைகளை மீறி செயல்படும் எம்.பி.க்கள் மீது உரிய நடவடிக்கையை தாங்கள் மேற்கொள்ள வேண்டும். உங்கள் உத்தரவையும் மீறி உறுப்பினர்கள் மைய பகுதிக்கு வந்து கோஷம் எழுப்பினால் அன்றைய தினத்தின் அவர்களுடைய சம்பளத்தையும், அலவன்சையும் நிறுத்தி வையுங்கள்.
உங்கள் எச்சரிக்கைக்கு பிறகும் கீழ்ப்படியாமல் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் அவர்களை எஞ்சிய சபை நாட்கள் முழுவதும் நீக்கி வையுங்கள்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார். இவர் கூறியது நடைமுறைக்கு வந்தால் நிச்சயம் பாராளுமன்றம் அமைதியாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.