ஸ்ரீரங்கம் கோயிலுக்கும், ரயில் நிலையத்துக்கும் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீரங்கம் ரயில் நிலைய அதிகாரி செந்தில்குமார் அவர்களுக்கு நேற்று மாலை ஒரு மர்மக் கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் வரும் 29-ஆம் தேதிக்குள் பயங்கர சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடிக்கும் என்று எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை மோகன் முரளி, முருகன் விடியோ, போட்டோ கடை, ராமலிங்க நகர், புத்தூர், திருச்சி என்ற முகவரியில் இருந்து எழுதப்பட்டதாக அதில் உள்ளது. மேலும் இதேபோல், ஸ்ரீரங்கம் கோயில் அதிகாரிக்கும் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
இதையடுத்து, ரயில்வே கோட்ட பாதுகாப்பு ஆணையர் செந்தில்குமரேசன் தலைமையில், ரயில்வே வெடிகுண்டு சோதனை நிபுணர்கள், துப்பறியும் நாயுடன் ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் மற்றும் கோயிலில் தீவிர சோதனை நடத்தினர்.
ஸ்ரீரங்கம் காவல் நிலைய ஆய்வாளர் சிவசுப்பிரமணியன், அந்த மர்மக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முகவரியில் சென்று விசாரித்தபோது, அந்த கடிதத்தில் இருந்த முகவரி சரியாக இருந்தது. ஆனால், அந்த முகவரியில் இருந்தவரிடம் இதுகுறித்து கேட்டபோது, தனக்கும் அந்த கடிதத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. யாரோ என்னை சிக்கவைக்கும் நோக்கில் இதுபோன்று என் முகவரியை எழுதி அனுப்பியுள்ளனர் என்றார்.
கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நவ. 29-ம் தேதி வரை அனைத்து ரயில் நிலையங்களும் கண்காணிக்கப்படும் என்று ரயில்வே கோட்ட பாதுகாப்பு ஆணையர் செந்தில் குமரேசன் தெரிவித்தார்.