சென்னையில் ஆண்டுதோறும் மாபெரும் புத்தகக்கண்காட்சி நடைபெறுவதை போலவே கடலூர் மாவட்டம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது.
கடந்த 4ஆம் தேதி நெய்வேலி லிக்னைட் அரங்கில் இந்த புத்தக கண்காட்சி தொடங்கியது. NLC தலைவர் பி.சுரேந்திரமோகன் தலைமையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் இந்த கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், தங்கள் பதிப்பின் புத்தகங்களை இந்த கண்காட்சியில் விற்பனைக்காக வைத்துள்ளனர்.
மாநில அளவில் வெற்றிகரமாக நடத்தப்படும் இந்த புத்தகக் கண்காட்சியில் 155 பதிப்பாளர்கள் பங்குகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 10,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. புத்தகக் கண்காட்சி நிகழ்வை ஒட்டி தினமும் ஒரு எழுத்தாளர், ஒரு பதிப்பாளர் கெளரவிக்கப்படுவதோடு, ஒரு நூல் வெளியீட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விநாடி-வினாப் போட்டி, உடனடி திறனறியும் போட்டி ஆகியவைகளும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இக்கண்காட்சி அரங்குகளில் இடம்பெற்றுள்ள புத்தகக் கடைகளில் வாங்கும் புத்தகத்துக்கு சிறப்புத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து வரும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அனுமதி இலவசம்.