விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அருகே உள்ள சோரம்பட்டியை என்ற பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள ஒரு மனுவில் கூறியிருப்பதாவது:
பிரபல வில்லன் நடிகரும், அதிமுக தலைமைக்கழக பேச்சாளருமான பொன்னம்பலம் மதுரையில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருவதாகவும், அந்த அறக்கட்டளைக்கு நாள் வாடகை அடிப்படையில் தனது காரை கடந்த 2011ஆம் ஆண்டு கொடுத்ததாகவும், ஆனால் அதற்குரிய வாடகை பணத்தை கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து தரவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் தனது காரை நடிகர் பொன்னம்பலம் அடமானம் வைத்திருப்பதாகவும், 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் காரை அடமானத்தில் இருந்து மீட்டு திரும்ப ஒப்படைப்பதாகவும், இல்லாதபட்சத்தில் காரை உடைத்து பழைய இரும்புக்கடையில் விற்று விடுவதாகவும் கூறி பொன்னம்பலம் தரப்பில் இருந்து மிரட்டல் வந்துள்ளதாகவும் தனது மனுவில் கூறியுள்ளார்.
வாடகைப் பணம் மற்றும் காரை திருப்பி தராமல் மோசடியில் ஈடுபடும் நடிகர் பொன்னம்பலம், அவருடைய உதவியாளர் மணி, அறக்கட்டளை நிர்வாகிகள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவகாசி டவுன் போலீசில் புகார் செய்தும் இதுவரை போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் எனவே, உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தனது மனுவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஜெ.ஜெயக்குமரன் ஆஜராகி வாதாடினார். இந்த புகார் சம்பந்தமாக போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் இருந்து உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிப்பதாக அரசு வக்கீல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, மனு மீதான விசாரணையை வருகிற 13ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.