சாதியை இழிவுபடுத்தி பேசியதாக நடிகை ரோஜா மீது வழக்கு. ஆந்திராவில் பரபரப்பு

rojaபிரபல நடிகையும், ஆந்திராவில் உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி எம்.எல்.ஏவுமான நடிகை ரோஜா புத்தூர் பகுதியில் பொது மக்களிடம் குறைகேட்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஒரு குறிப்பிட்ட ஜாதியை இழிவுபடுத்தி அவர் பேசியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திராவில் உள்ள நகரி தொகுதி மக்கள் சிலருக்கு முதியோர் உதவித் தொகை கடந்த பல மாதங்களாக வழங்கப்படவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் விசாரிக்க நடிகை ரோஜா நேற்று புத்தூர் மண்டல பிரிவு அலுவலகத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றார். ஆனால் அவரை பார்க்க அதிகாரிகள் சம்மதிக்காததால், நடிகை ரோஜா தனது ஆதரவாளர்களுடன் மண்டல அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

நடிகை ரோஜாவின் போராட்டத்தை கண்டித்து தெலுங்கு தேச தொண்டர்கள் அவருக்கு எதிர் போராட்டம் நடத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது. இந்நிலையில்  சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சாய்நாத் தான் தெலுங்கு தேச தொண்டர்களை வரவழைத்ததாகவும், நீண்டநேரம் போராட்டம் நடத்தியும் அதிகாரிகள் வராததால் ‘‘நாங்கள் தீண்ட தகாதவர்கள் அல்ல. எங்கள் அருகில் வந்து பேசுங்கள்’’ என்று ரோஜா கூறியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து  நடிகை ரோஜா சாதியை இழிவுபடுத்தி பேசியதாக தெலுங்கு தேசம் கட்சியினர் புத்தூர் போலீசில் புகார் செய்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ரோஜா மீது போலீசார் எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இந்த தகவலை புத்தூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜூலு தெரிவித்தார். போலீசாரின் இந்த செயலுக்கு ரோஜா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

Leave a Reply