புதுச்சேரி அருகே கோவில் சிலைகளை அவமதிக்கும் வகையில் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தை ஒட்டியுள்ள சின்ன இருசம்பாளையம் முத்துமாரி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அம்மன் சிலை மீது, வாலிபர் ஒருவர் காலை வைத்து நிற்பது போன்ற காட்சி சமூகவலைத்தளம் ஒன்றின் மீது மிக வேகமாக பரவியது. இந்த புகைப்படத்தை பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த கோவில் அரியாங்குப்பத்தை அடுத்த, தமிழக பகுதியான சின்ன இருசாம்பாளையம் என்ற கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் என்று தெரியவந்ததால் தமிழகத்தில் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருமண நிச்சயதார்த்த விழா நடத்துவதற்காக இந்த கோவிலுக்கு வந்தவர்களில் இருவர் கோவில் கருவறை பின்புறத்தில் உள்ள சுவரில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் அம்மன் சிலை மீது காலை வைத்தபடி புகைப்படம் எடுத்துள்ளனர். அப்போது அந்த சிலையின் கை உடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து கோவில் தர்மகர்த்தா நாராயணசாமி ரெட்டிச்சாவடி போலீசில் புகார் கொடுத்துள்ளார். மதவாதத்தை துாண்டுதல், பொது சொத்தை சேதப்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்து சிவராஜ், வெங்கட் ஆகிய இருவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.