ஜெயலலிதா தேர்தலில் மீண்டும் போட்டியிட சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதியை தேர்வு செய்ததை அதிமுகவின் மட்டுமின்றி திமுக வட்டாரத்திலும் அதிர்ச்சியுடன் பார்க்கப்படுகிறது. பாதுகாப்பான தொகுதிகள் தமிழகத்தில் பல இருக்கும் நிலையில் திமுக செல்வாக்கு அதிகம் உள்ள சென்னையை ஜெயலலிதா தேர்வு செய்தது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது. எனவே இதுகுறித்து ஆராய திமுக மூத்த தலைவர்கள் ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டால் எந்த வேட்பாளரை நிறுத்தலாம், எந்தெந்த கட்சிகளிடம் ஆதரவு கேட்கலாம் என்று ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து பொதுவேட்பாளரை ஜெயலலிதாவுக்கு எதிராக நிறுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் மு.க.ஸ்டாலின் அவரது சகோதரர் மகன் திருமணத்திற்காக அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்ததோடு கூட்டணிக்கும் அச்சாரம் போட்டு வருவதாக செய்தி வெளிவந்தது. இதனால் எதிர்க்கட்சிகளிடம் இணக்கமாக உள்ள திமுக, ஆர்.கே.நகரில் ஜெயலலிதா போட்டியிட்டால் அவரை எதிர்க்க முடிவு செய்துவிட்டதாகவும் தெரிகிறது.