தமிழர்களுக்கு உரிமை இல்லையா? அமேசான் ஆன்லைன் நிறுவனம் மீது போலீஸ் புகார்

தமிழர்களுக்கு உரிமை இல்லையா? அமேசான் ஆன்லைன் நிறுவனம் மீது போலீஸ் புகார்
amazon
ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் அமேசான் கொடுத்த விளம்பரம் ஒன்று தற்போது சர்ச்சைக்குள்ளாகி, காவல்நிலையத்தில் புகார் கொடுக்கும் அளவுக்கு சென்றுவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் வெளியாகும் பெரும்பாலான நாளிதழிகளில் ‘பொருட்களை வாங்குங்க… தினமும் ஒரு கிலோ தங்கத்தை வெல்லுங்க’ என்று விளம்பரப்படுத்தியுள்ளது. இந்த விளம்பரத்தை நம்பி தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோர் அமேசான் மூலம் பொருட்களை வாங்கிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்தப் போட்டியில் இடம் கிடையாது என்று அமேசான் நிறுவனத்தின் இணையதளத்திஒல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்த விளம்பரம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

தமிழகத்தில் அச்சாகி, தமிழகத்தில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்துவிட்டு, தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை என்றால் எப்படி?’ என கொதித்து எழுந்த தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், இதுகுறித்து காவல்துறையில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாட்டில் காலை, மாலை வரும் தமிழ், ஆங்கில நாளிதழ்களில் கடந்த இரு தினங்களாக அமேசான் எனும் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் முழுப்பக்க விளம்பரங்களைக் கொடுத்துள்ளது. இந்தியாவின் ஈடு இணையற்ற விற்பனை என்று கொடுக்கப்பட்டுள்ள அந்த விளம்பரத்தில் ‘அமேசான் ஆப்’பில் பொருட்களை வாங்குங்கள் தினமும் ஒரு கிலோ தங்கத்தை வெல்வதற்கான வாய்ப்பைப் பெற்றிடுங்கள்’ என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இதைப் படிக்கும் பாமர மக்கள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை வாங்கினால் ஒரு கிலோ தங்கத்தை வெல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் பொருட்களை வாங்கும் வாய்ப்பு உள்ளது.

ஆனால், அமேசான் நிறுவனத்தின் இணைய தள முகவரியில் அதிகாரப்பூர்வமான விதிகள் என்று கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், தினமும் ஒரு கிலோ தங்கம் வெல்லும் தகுதி தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு இல்லை என்று கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விதி பத்திரிகைகளில் கொடுக்கப்படவில்லை. இது ஒரு நூதன மோசடி ஆகும். இதனால் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் ஏமாறக்கூடிய வாய்ப்பு உள்ளதால், உடனடியாக இந்த விளம்பரங்களை தடை செய்ய வேண்டும். மோசடியாக தமிழ்நாட்டில் மக்களை ஏமாற்றும் இந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி உள்ளார்.

இந்த புகார் மனு தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply