திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் எம்.பி மற்றும் எம்எல்ஏக்களின் சிபாரிசு கடிதங்களை போலியாக தயாரித்து விற்பனை செய்து பெரும் பணம் சம்பாதித்த ஒருவர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பதி கோவிலிலுக்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் போலி சிபாரிசு கடிதம் தயாரித்து விற்பனை செய்வதாக சமீபத்தில் ஏராளமான புகார் வந்தது. இதையடுத்து கோவில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் நடத்திய அதிரடி ரெய்டில் தங்கும் அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும் கவுண்டரில், நீண்ட நாட்களாக நடமாடிக் கொண்டிருந்த மோகன்ரெட்டி என்பவர் நேற்று கையும் களவுமாக பிடிபட்டார்.
முதலில் சந்தேகத்தின் பேரில் மோகன்ரெட்டியைப் பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அவர், கோவில் அதிகாரிகளின் கையெழுத்து மற்றும் எம்எல்ஏ, எம்பிக்கள் உட்பட முக்கியப் பிரமுகர்களின் சிபாரிசுக் கடிதங்களை போலியாக தயாரித்து, அவற்றை பக்தர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்று வந்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
இதனையடுத்து மோகன்ரெட்டியை கைது செய்த தேவஸ்தான அதிகாரிகள், இந்த முறைகேட்டில் இன்னும் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.