பரபரப்பை ஏற்படுத்திய பனாமா ஆவணங்கள். பல ஆயிரம் கோடி லட்சம் அமெரிக்க டாலர்கள் முதலீடு
உலகம் முழுவதிலும் உள்ள அரசியல்வாதிகள், கோடீஸ்வரர்கள், சினிமா நட்சத்திரங்கள் ஆகியோர் சுவிஸ்வங்கிகளில்தான் இதுவரை தங்கள் கருப்புப்பணத்தை பதுக்கியிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது பனாமா நாட்டில் உலகின் முக்கிய விஐபிக்கள் பல ஆயிரம் கோடி லட்சம் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. இதுகுறித்து ஜெர்மனி நாளிதழ் ஒன்று ‘பனாமா ஆவணங்கள்’ என்ற பெயரில் ஆதாரங்களுடன் கூடிய செய்தி வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 40 ஆண்டுகளில் பனாமா நாட்டில் 2 லட்சத்து 14 ஆயிரம் நிறுவனங்களில் உலகின் முக்கிய பிரமுகர்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளதாக ஜெர்மன் நாளிதழ் மெகா பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவரை உலகில் நடந்த மிகப்பெரிய முறைகேடு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஸ்லாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் முன்னாள் மற்றும் தற்போதைய பிரதமர்கள், உக்ரைன் ஜனாதிபதி, சவுதி அரேபியா மன்னர் உள்பட 12 நாடுகளின் தலைவர்கள் மற்றும் ரஷிய அதிபர் புதினின் நெருங்கிய உதவியாளர்கள், அர்ஜென்டினாவின் பிரபல கால்பந்து வீரர் லயனல் மெஸ்சி, ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் மற்றும் 140 அரசியல் தலைவர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் உள்ளது.
ரஷ்ய அதிபர் புதினின் உதவியாளர்கள் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்(சுமார் ரூ.13 ஆயிரம் கோடி) வங்கிகள் வழியாகவும், நிழல் நிறுவனங்கள் மூலமும் பதுக்கி உள்ளதாக பனாமா ஆவணங்கள் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் குடும்பத்தினர், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனின் தந்தை, ஐஸ்லாந்து நாட்டின் பிரதமர் சிக்முன்டுர் டேவிட் குன்லாக்சன் ஆகியோரும் பல மில்லியன் டாலர்கள் அளவிற்கு வங்கி பத்திரங்களை பனாமா நாட்டில் வாங்கி சொத்துகளாக குவித்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் நடிகர்-நடிகைகள் உள்பட 500 விஐபிக்களின் பெயர்கள் உள்ளதாகவும் இதுகுறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
Chennai Today News: Panama Papers: a massive document leak reveals a global web of corruption and tax avoidance