சிவாஜி கணேசனுக்கு அரசு செலவில் மணிமண்டபம். சட்டமன்றத்தில் ஜெயலலிதா அறிவிப்பு
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என சிவாஜி ரசிகர்களும், பல்வேறு அரசியல் கட்சியினர்களும் தமிழக அரசுக்கு பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இன்று சட்டமன்றத்தில் விதி 110ன் கீழ் பேசிய முதல்வர் தமிழக அரசின் செலவில் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழ் திரையுலகினர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா இது தொடர்பாக சட்டப்பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா படித்த அறிக்கை கூறியிருப்பதாவது:
‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘கப்பலோட்டிய தமிழன்’, போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் பாத்திரங்களை ஏற்று அற்புதமாக நடித்து, அவர்களின் பங்களிப்பினை திரைப்படங்கள் மூலம், பட்டிதொட்டி எங்கும் எடுத்துச் சென்றவருமான மறைந்த சிவாஜி கணேசன் அவர்களின் கலைச் சேவையை பாராட்டிடும் வகையிலும், அவரது நினைவைப் போற்றிடும் வகையிலும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, நடிகர் சங்கம் சார்பாக நினைவகம் அமைக்கும் வகையில், சென்னை மாவட்டம், அடையாறு பகுதி சத்யா ஸ்டுடியோவிற்கு எதிரே உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 65 சென்ட் நிலத்தினை தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வழங்கிட 26.9.2002 அன்று உத்தரவிட்டேன்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் சிவாஜி கணேசன் அவர்களுக்கு நினைவகம் அமைக்க இடம் ஒதுக்கித் தரும்படி, கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த உத்தரவை வழங்கினேன். அதன் பேரில் மைலாப்பூர் வட்டாட்சியரால் இந்த இடம் தென்னிந்திய நடிகர் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட இடத்தின் ஊடே நீதியரசர்கள் குடியிருப்புகளுக்கு செல்லும் சாலை அமைந்திருந்ததால், நீதியரசர்கள் குடியிருப்புக்குச் செல்ல தனியே சாலை அமைப்பதன் செலவான 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை தென்னிந்திய நடிகர் சங்கம் அளித்திட வேண்டுமென அரசால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
தென்னிந்திய நடிகர் சங்கம் தங்களால் 2 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்க இயலும் என தெரிவித்து அதனை 26.7.2004 அன்று வழங்கினர். எனவே, புதிய அணுகு சாலையை அமைப்பதற்கான மீதமுள்ள 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை எனது தலைமையிலான தமிழக அரசே ஏற்றுக் கொண்டது. சிவாஜி கணேசன் மணிமண்டபம் அமைப்பதற்கு வழங்கப்பட்ட நிலத்தை சுற்றி சுற்றுச் சுவர் ஒன்றை 13.2.2006 அன்று எனது தலைமையிலான அரசே அமைத்தது. தென்னிந்திய நடிகர் சங்கம், சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை தாங்களே அமைத்து விடுவோம் என்று தெரிவித்த காரணத்தால் எனது தலைமையிலான அப்போதைய அரசு மணி மண்டபம் கட்டுவதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை.
சிவாஜி கணேசன் அவர்களின் மணிமண்டபத்தை அரசே கட்ட வேண்டும் என்று அப்போதே தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டிருந்தால், அதற்கான உத்தரவையும் அப்போதே வழங்கியிருப்பேன். சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைப்பதற்காக எனது அரசால் வழங்கப்பட்ட இடத்தில், தென்னிந்திய நடிகர் சங்கத்தால் இதுவரை நினைவகம் அமைக்கப்படவில்லை. அந்த இடத்தில் தமிழக அரசே சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்திட வேண்டுமென பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, சிவாஜி கணேசன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், மணிமண்டபம் அமைக்க தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடத்தில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு தமிழக அரசு சார்பாக மணிமண்டபம் அமைக்கப்படும்”
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.