காஞ்சிபுரம் அருகே பாழடைந்த பெருமாள் கோயிலில் திடீரென இரவோடு இரவாக பெருமாள் சிலை ஒன்று தானாக தோன்றியுள்ளதால் அந்த பகுதியில் இருக்கும் பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அருகே ஐயன்பேட்டையை அடுத்த படப்பம் என்ற சிறிய கிராமத்தில் பாழடைந்த அழகிய மணவாளப் பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயில் நுழைவாயில் முதல் அனைத்து பகுதிகளும் மிகவும் சேதாரமான நிலையில் இருந்துள்ளது. சுவாமி கருவறை உள்பட கோவில் முழுவதுமே கிட்டத்தட்ட இடியும் நிலையில் இருந்ததால் யாரும் சமீபத்தில் அந்த கோவிலுக்கு செல்வது கிடையாது.
இதனால் இந்த பாழடைந்தக் கோயிலைச் சுற்றி புற்கள் முளைத்து காடுபோல் காட்சியளித்தது. இந்நிலையில் நேற்று காலை அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிலர் கோயில் வழியாக தற்செயலாக சென்று பார்த்தபோது கோயில் கருவறைக்கு முன்புள்ள மண்டபத்தில் அழகிய வேலைப்பாடுடன் கூடிய 4 அடி உயர பெருமாள் சிலை ஒன்றும் ஒன்றரை அடி உயர தாயார் சிலையும் இருப்பதை ஆச்சரியப்பட்டனர். இரண்டு சிலைகளுமே புதிதாக வடிவமைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவியதால் அந்த பகுதி மக்கள் கோவிலை நோக்கி செல்ல தொடங்கினர்.
உடனடியாக பூசாரியை வரவழைத்த கிராம மக்கள் சுவாமி சிலைக்கு எண்ணெய்க் காப்பு நடத்தி அபிஷேகம், அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடத்தினர். மேலும் கோயில் கட்டி உடனடியாக சுவாமியை பிரதிஷ்டை செய்து திருவிழா நடத்த வேண்டும் என்று சுவாமி அருள் வந்தவர்கள் வாக்குக் கூறினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் சிலை எங்கிருந்து வந்தது? யார் கொண்டு வந்தது? என்பது இன்னும் மர்மமாக உள்ளதாக கூறப்படுகிறது.