ஸ்.வி.சேகரை கைது செய்யாத காவல் ஆணையருக்கு நோட்டீஸ்
நகைச்சுவை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது முகநூலில் பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று புகார் மனு கொடுத்தனர்.
இந்த மனுவின் அடிப்படையில் எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் அவர் கைது செய்யப்படவில்லை. இதனையடுத்து எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இருப்பினும் எஸ்.வி.சேகர் கைது தாமதமானதால் காவல்துறைக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது
இந்த நிலையில் எஸ்.வி.சேகரை கைது செய்ய நடவடிக்கை எடுக்காததால் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் எஸ்.வி.சேகரை கைது செய்து சட்டத்தின் முன் 7 நாட்களுக்குள் நிறுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் ஆய்வாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது