காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பிக்கவுள்ள ஜி.கே.வாசன், மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் பெயரையும், சைக்கிள் சின்னத்தையும் கைபற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
1996ஆம் ஆண்டு ஜி.கே வாசனின் தந்தை ஜி.கே. மூப்பனார் அப்போதைய பிரதமர் நரசிம்மராவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கி தேர்தல் ஆணையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் என்று பதிவு செய்தார். இக்கட்சிக்கு சைக்கிள் சின்னத்தையும் தனது செலாக்கை வைத்து பெற்றார். மூப்பனாரின் மறைவுக்குப் பிறகு தமாகாவின் தலைவராகப் பொறுப்பேற்ற வாசன், 2002ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தார்.
ஜி.கே.வாசனிடம் இருந்து பிரிந்து சென்ற தேனி ஜெயக்குமார் தலைமையில் தாமக அதன்பின்னர் செயல்பட்டது. பின்னர், அவரும் காங்கிரஸில் இணைந்த பிறகு தாமக செயல்படாவிட்டாலும், வேறு ஒருவர் தலைவராக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் மீண்டும் தமாகா பெயரை ஜி.கே.வாசன் பயன்படுத்த முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து ஜி.கே.வாசன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.