தொடர் எதிர்ப்பு எதிரொலி. ஏ.ஆர்.ரஹ்மானின் இலங்கை இசை நிகழ்ச்சி ரத்து
சமீபத்தில் சென்னை, கோவை ஆகிய நகரங்களில் ‘நெஞ்சே எழு’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்திய ஏ.ஆர்.ரஹ்மான் வரும் 23ஆம் தேதி இலங்கை தலைநகர் கொழும்பு நகரில் ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் தமிழர்களின் தொடர் எதிர்ப்பு காரணமாக இந்த இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 23ஆம் தேதி கொழும்பு நகரில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் 10-க்கும் மேற்பட்ட பிரபல பின்னணி பாடகர்-பாடகியர் பங்கேற்க இருந்தனர். முதன்முதலாக ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி இலங்கையில் நடப்பதால் அந்நாட்டு மக்கள் இந்த நிகழ்ச்சியை காண மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர்.
ஆனால் இறுதிப்போர் உள்பட பல்வேறு காலகட்டங்களில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மண்ணில் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடத்த கூடாது என்ற பல தமிழ் அமைப்புகள் எதிர்ப்புக்குரல் கொடுத்தன. குறிப்பாக சென்னையில் உள்ள அவரது வீட்டை சுற்றிலும் இலங்கை தமிழ் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்களை ஒட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த நிலையில், வரும் 23-ம் தேதி நடைபெறுவதாக இருந்த ‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தற்போது அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.