திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள், வீர வணக்க நாள் விழா மற்றும் இளைஞர் எழுச்சி நாள் விழா ஆகிய மும்பெரும் விழா திமுக சார்பில் கோவை சுந்தராபுரத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஆ.ராசா கலந்து கொண்டு பேசினார்.
ஆ.ராசா இந்த கூட்டத்தில் பேசியதாவது: “தமிழ்நாட்டில் முதல் அமைச்சராக இருந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அடையாளம் உள்ளது. குலகல்வி திட்டத்தை கொண்டு வந்தவர் ராஜாஜி. இந்தி திணிப்பை கொண்டு வந்தவர் ராஜாஜி. கிராமங்கள் தோறும் பள்ளிகளை திறந்து கல்வி கண் திறந்தவர் காமராஜர். சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்.
இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் உண்டு. இந்த வகையில் 50 ஆண்டு கால கலாச்சாரத்தை ஆராய்ந்து பார்த்தால் தலைவர் கருணாநிதியின் வரலாற்று சாதனைகள் தெரிய வரும்.
1970ஆம் ஆண்டு தமிழகத்தில் கிராமங்களுக்கு மின்சாரம் கிடையாது. 3 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி செய்து கொடுத்தவர் கருணாநிதி. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில் 1 யூனிட் மின்சாரத்துக்கு 1 பைசா மட்டும் குறைத்து கொள்ள வேண்டி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் மின்சாரத்துக்கு கட்டணமே வேண்டாம். விவசாயத்துக்கு இலவசமாக வழங்குகிறோம் என்று மின் கட்டணத்தை ரத்து செய்தார்.
1989–ல் பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை வேண்டும் என்ற சட்டத்தை கருணாநிதி கொண்டு வந்தார். மீண்டும் முதல்வராக வந்தபோது ஊனமுற்றவர்களை முடம் என்று சொல்லக்கூடாது என்றும், அவர்கள் மாற்றுத் திறனாளி என்றே அழைக்க வேண்டும் என்று கொண்டு வந்தவர் கருணாநிதி. இவ்வாறு கருணாநிதிக்கு நிறைய அடையாளங்கள் உண்டு.
அ.தி.மு.க. ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. நீலகிரியில் 8 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நீர்மின்சார திட்டம், பெரம்பலூரில் 150 கோடியில் நீர்தேக்க நிலையம் அமைக்கும் திட்டம் இதுபோன்ற நூற்றுக்கணக்கான திட்டங்கள் அறிவிப்போடு மட்டும் தான் உள்ளது.
இந்தியாவில் ஊழல் குற்றச்சாட்டிற்கு உட்பட்ட யாரும் தாமாக முன்வந்து நீதிமன்ற சாட்சி கூண்டில் ஏறி சி.பி.ஐ. குறுக்கு விசாரணை செய்யட்டும் என்று கூறியது கிடையாது. ஆனால் நான் சி.பி.ஐ. விசாரணை செய்து பார்க்கட்டும் என்று கூறினேன். 33 இடங்களில் நடத்திய சோதனையில் 1 பைசா கூட சிக்கவில்லை
இவ்வாறு ஆ.ராசா பேசினார்.