தமிழக சட்டப்பேரவையில் கச்சத்தீவை மீட்க தீர்மானம்.

kachatheevuநேற்று நடைபெற்ற சட்டசபையில் கச்சத்தீவைத் திரும்பப் பெற மத்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவையில் கச்சத்தீவை மீட்கக் கோரும் தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சட்டசபையில் பேசியதன் விபரங்கள்:

மத்திய அரசு மேற்கொண்ட ராஜ்ஜிய நடவடிக்கைகள் காரணமாக இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களும் நவம்பர் 19-ஆம் தேதி விடுவிக்கப்பட்டு, நவம்பர் 20-ஆம் தேதி தாயகம் திரும்பினர்.

5 மீனவர்களின் வழக்குச் செலவுக்கும், அவர்கள் சிறையில் இருந்தபோது அவர்களின் குடும்பத்தினரின் வாழ்வுக்கும், மீனவர்கள் இந்தியா திரும்பியதும் அவர்கள் புது வாழ்வு தொடங்குவதற்கும் என மொத்தம் ரூ.63.85 லட்சத்தை தமிழக அரசு வழங்கியது.

இதற்காக தமிழக அரசுக்கும், 5 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்த பிரதமர் நரேந்திரமோடிக்கும், மத்திய அரசுக்கும் சட்டப்பேரவை நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவிக்கிறது.

கச்சத்தீவு மீட்பு: தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டதுதான்.

தமிழக மீனவர்கள் எவ்வித இன்னலும் இல்லாமல் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேற்கொள்ள ஏதுவாக கச்சத்தீவைத் திரும்பப் பெற வேண்டும்.

பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமையை இலங்கை அரசு தடுக்காமல் இருப்பதற்கும், தேவையான அனைத்து நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.

இந்தத் தீர்மானத்தை சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று பன்னீர்செல்வம் முன்மொழிந்தார்.

Leave a Reply