இந்தியா எதிர்ப்பு எதிரொலி: பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்க நாடளுமன்றத்தில் தீர்மானம்
பாகிஸ்தானுக்கு எஃப்-16 ரக போர் விமானங்களை விற்பனை செய்ய சமீபத்தில் அமெரிக்க அரசு எடுத்த முடிவிற்கு இந்தியாவின் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தானில் தீவிரவாதம் தலைதூக்கி இருப்பதால் இந்த போர் விமானங்களை அந்நாட்டுக்கு வழங்குவது அண்டை நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என இந்தியாவின் தரப்பில் இருந்து தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த போர் விமானங்களை வழங்குவதைத் தடை செய்ய வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தற்போது தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த தீர்மானங்கள் வெற்றி பெற்றால் இந்தியாவின் கோரிக்கை நிறைவேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் திறன் கொண்ட எட்டு எஃப்-16 ரக விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கப் போவதாக அமெரிக்கா அறிவித்தது. இதற்காக 70 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தம் மேற்கொள்ளப் போவதாகவும் அமெரிக்க அரசு சில நாட்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாகத் அறிவித்தது. ஆனால் இந்தியாவின் கடும் எதிர்ப்பு காரணமாக பாகிஸ்தானுக்கு போர் விமானங்களை விற்பனை செய்யக் கூடாது என்று வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் எம்.பி. ராண்ட் பால் தீர்மானம் ஒன்றை நேற்று தாக்கல் செய்தார். பின்னர் இதுகுறித்து அவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசியபோது, “அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தின் மீது கடந்த 2001-ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தி 3,000 பேரைக் கொன்ற பின்லேடன் ஒரு கொடுமையான பயங்கரவாதி. அத்தகைய குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும், கண்டுபிடிப்பதற்கும் ஷகீல் அஃப்ரிடி என்ற பாகிஸ்தானிய மருத்துவர் உதவினார்.
ஆனால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்துள்ளது பாகிஸ்தான் அரசு. நம்மிடமிருந்து (அமெரிக்கா) பெறப்படும் ஆயுதங்களைக் கொண்டு பாகிஸ்தானில் உள்ள மக்கள் மீதும், குறிப்பாக பலூசிஸ்தான் மாகாண மக்கள் மீதும் அந்நாட்டு அரசு அடக்குமுறையை ஏவி வருகிறது. அதன் காரணமாகவே நான் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தேன் என்று அவர் கூறியுள்ளார்.
அதேபோல் அந்நாட்டின் கீழ் சபையிலும் இந்தத் தீர்மானத்தை எம்.பி. டானா ரோராபேச்சர் என்பவர் தாக்கல் செய்தார். கீழ்சபையில் தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய டானா ரோராபேச்சர், “பாகிஸ்தானில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 50,000 பேர் உயிரிழந்துள்ளனர் பயங்கரவாதிகளால் அந்நாட்டுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் உள்ளது. அதன் காரணமாகவே, அந்நாட்டுக்கு போர் விமானங்களை அளிக்க அமெரிக்க அரசு முன்வந்துள்ளது. இதன் மூலம், பயங்கரவாதிகளுக்கு எதிராக நவீன தொழில்நுட்பரீதியாக பாகிஸ்தான் போரிட முடியும்.
இந்த இரண்டு தீர்மானங்கள் குறித்து கருத்து கூறிய அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, ” பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுகிறது. பாகிஸ்தான் அரசானது உள்நாட்டு பயங்கரவாதத்தை எதிர்க்கும் அதேவேளையில், இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தானில் நிகழ்த்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களை ஆதரிக்கிறது’ என்று கூறியுள்ளார்
இந்த தீர்மானங்கள் மீது விரைவில் விவாதம் நடைபெறும் என்றும் அதன் பின்னர் இந்த தீர்மாங்கள் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என கூறப்படுகிறது.