குற்றால அருவியின் இயற்கை சூழலை பாதுகாக்க எண்ணெய், சிகைக்காய், சோப்பு முதலியவைகளை பயன்படுத்தி குளிக்கக்கூடாது என நீதிமன்றம் கடந்த 24ஆம் தேதி உத்தரவிட்டதை தொடர்ந்து இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றால அருவி உள்பட தமிழகத்தின் அருவிகள் அனைத்தையும் பாதுகாக்க தனி வாரியம் அமைக்கப்படும் என்றும், அதுமட்டுமின்றி குற்றால அருவிகளில் பெண்களுக்கென கூடுதலான கழிவறைகள், உடை மாற்றும் அறைகள் கட்டப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் சமூக விரோதிகளின் குற்றச்செயல்களை தடுப்பதற்கு பேருந்து நிலையங்கள் உள்பட முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படும் என மேலும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் இன்று வெளியிட்டிருக்கும் விரிவான அறிக்கையின் விபரம் வருமாறு:
பாரம்பரியமிக்க இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை பாதுகாப்பது குறித்தும், குற்றாலத்திற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளின் வசதிகள் குறித்தும் இன்று (27.6.2014) எனது தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்யது இழுக்கக் கூடிய பகுதிகளான மலைப் பிரதேசங்கள், வனப் பகுதிகள் மற்றும் அருவிகள் விழும் பகுதிகளில் இயற்கையை பேணிக் காப்பதற்காக தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்தும், அவற்றை மேம்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், சுற்றுலாப் பயணிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விரிவான விவாதத்திற்குப் பிறகு, இயற்கையை போற்றிப் பாதுகாக்கும் வகையில் கீழ்க்காணும் நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இதன்படி,
1. வனப் பகுதிகள், அருவிப் பகுதிகள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள இயற்கை எழிலைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் கூர் உணர்வு மற்றும் பாரம்பரிய மிக்க பகுதிகள் பாதுகாப்பு ஆணையம் ((Tamil Nadu Authority for Preservation of Eco Sensitive and Heritage Areas)) என்ற ஓர் அமைப்பு எனது தலைமையில் ஏற்படுத்தப்படும். இதற்கான சட்டமுன்வடிவு வரும் சட்டமன்ற கூட்டத் தொடரின் போது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படும்.
2. இந்த ஆணையம் சுற்றுச்சூழல் கூர் உணர்வு மற்றும் பாரம்பரியம் மிக்க அனைத்துப் பகுதிகளையும் பாதுகாக்கத் தேவையான அதிகாரங்களை கொண்டதாக அமையும்.
3. குற்றால அருவியின் தூய்மையைப் பாதுகாக்கவும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
4. குற்றாலம் பகுதியில் தேவையான விளக்குகள் பொருத்தப்படுவதோடு போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
5. பழைய குற்றாலம் மற்றும் பிரதான அருவி பகுதிக்கு இடையே சிற்றுந்துகள் இயக்கப்படும்.
6. குற்றாலத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்படும்.
7. சுற்றுலாப் பயணிகள் குப்பைகளை குப்பைத் தொட்டியில் போட வசதியாக, ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் வைக்கப்படும்.
8. குற்றாலத்தில் உள்ள அரசிற்கு சொயதமான பழைய குடில்கள் இடிக்கப்பட்டு, அடுக்குமாடிக் கட்டடம்
கட்டப்படும். இயத அடுக்குமாடிக் கட்டடம், சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கேற்ப, அனைத்து வசதிகளுடன் கூடிய துயில் கூடங்கள், ஒருவர் படுக்கும் அறை, இருவர் படுக்கும் அறை, கூடுதல் வசதிகளுடன் கூடிய பெரிய அறை ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையும்.
9. குற்றாலத்தில் மகளிர் கழிவறைகள் மற்றும் உடை மாற்றும் அறைகள் கூடுதலாகக் கட்டப்படும்.
10. குற்றாலத்தின் முக்கியப் பகுதிகளான பேருந்து நிலையம், அருவிப் பகுதிகள், வாகன நிறுத்துமிடங்கள் போன்ற இடங்களில் CC TV காமராக்கள் பொருத்தப்படும்.
எனது தலைமையிலான அரசின் மேற்காணும் நடவடிக்கைகள் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படுவதோடு, அவற்றின் இயற்கை எழிலும் போற்றி பாதுகாக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.